தமிழர் போற்றிய மூலிகைகள் 4 மல்லி ஒரு கில்லி!

 • கொத்தமல்லி (Coriandrum sativum) அல்லது மல்லி எனப்படும் இந்த மூலிகையை வெறுமனே ஒரு சுவை கூட்டி என்று நீங்கள் நினைத்தால் அது தவறு! 50 செமீ உயரம் வரை வளரக் கூடிய இந்த செடி வகை மூலிகையின் பெருமையைப் பேச இரண்டாயிரம் ஆண்டுகள் போதாது! காரணம் இன்று யூதர்கள் பெரும்பான்மையாக வாழும் இஸ்ரேல் நாட்டில் தொல்பொருள் ஆய்வாளர்களால் கண்டெடுக்கப்பட்ட சில கொத்தமல்லி விதைகள், சுமார்  8000 ஆண்டுகள் பழமையானவை என்று நிரூபிக்கப்பட்டிருக்கிறது!

  இந்த மூலிகையின் இலைகளோடு, விதைகளும் அரிய கொடை! சிறிய அடுக்கான வெள்ளை பூக்களைப் பூக்கும் இந்த மூலிகை. பூக்கள் முற்றி அவை காய்களாகி, அறுவடை செய்து காயவைத்தவுடன் தனியா என்று அழைக்கப்படும் காய்ந்த விதைகள்தான் மல்லியாகின்றன! நமது  தலைமுறையில் வாசனைக்காகவும் சுவைக்காகவுமே உணவில் மல்லியைச் சேர்க்கிறோம் என்று நம்மில் பலரும் நினைக்கலாம், ஆனால் நம் முன்னோர்கள் இதன் மருத்துவகுணம் அறிந்தே சமையலில் தவறாது சேர்த்து வந்திருக்கிறார்கள். எல்லா உணவையும் மணக்கச் செய்யும் மகிமை கொத்தமல்லிக்கு உண்டு. இதனுடைய விதை, இலை இரண்டுமே ஒப்பிட முடியாத மருத்துவக்குணம் கொண்டவை.

  கொத்தமல்லி மூலிகைக் கீரையாக இருக்கும்போது அதில் ஏ, பி, சி ஆகிய உயிர் சத்துக்களும், சுண்ணாம்புச்சத்து மற்றும் இரும்புச்சத்து ஆகியவையும் உள்ளன. முதலில் மூலிகையாக இருக்கும் பச்சைக்கொத்த மல்லி, உயிருக்கு உலை வைக்கும் உடலின் கொழுப்புச்சத்தை குறைத்து ரத்த நாளங்களில் கொழுப்பு உறைவதை தடுக்கிறது. இதனால் மாரடைப்பு ஆபத்தை குறைக்கிறது. கொத்தமல்லி கொழுப்பை குறைக்கும் அதேநேரம் ரத்தத்தை சுத்திகரிக்கும் வேலையையும் செய்கிறது!

  அதேபோல உடலின் துப்புறவு தொழிற்சாலை என்று சொல்லப்படும் சிறுநீரகத்தின் நண்பன் இந்த கொத்தமல்லி! ரத்ததில் உள்ள உப்பு, சர்க்கரை இரண்டையுமே குறைப்பதில் மல்லி ஒரு கில்லி! மல்லிக்கு இன்சுலின் சுரப்பைத் தூண்டுகிற ஆற்றல் இருப்பதால், கர்ப்பிணிப் பெண்கள் கர்ப்பம்தரித்த மாதத்தில் இருந்து, துவையலாகவும், மல்லிக்காப்பி, பச்சக்கொத்த மல்லி சூப் என்று சாப்பிட்டு வந்தால் குழந்தையின் எடையை கட்டுப்பாட்டில் வைத்து ஆரோக்கியமான, வலுவான எலும்பு வளர்ச்சி கொண்ட குழந்தை பிறக்க இந்த மூலிகை உதவுகிறது!

  இவை மட்டும்மல்ல! மல்லியை உணவில் சேர்த்துக் கொண்டால் மன அமைதி கொடுக்கும்! கொத்துமல்லி இலைச்சாருடன் கொஞ்சம் சீரகம் சேர்த்து அதனுடன் பனங்கற்கண்டு கலந்து, கசாயம் செய்து அருந்தினால் சுவையின்மை நீங்கி பித்ததினால் ஏற்படும் தலைசுற்றல் நிற்கும், உடல் சூடு தனியும், உடலில் காயங்கள் இருந்தாலோ, சளியினால் வரும் காய்ச்சல் இருந்தாலோ அனைத்தையும் மல்லிக் கசாயம் சட்டென்று குணப்படுத்தும்! வீட்டில் தொட்டிகளில் வளர்க்க ஏதுவான கொத்தமல்லி கொட்டிக்கொடுக்கும் பலன்களை எழுதி முடிக்க இங்கே பக்கங்கள் போதாது!  இப்படியும் பயன்படுத்தலாம் மல்லியை...
 • வயிற்றுப் புண்ணை ஆற்றுவதற்கும் மல்லி விதையைச் சேர்க்கலாம்.
 • மல்லி விதை நீரிழிவு நோயைக் கட்டுப் படுத்துவதிலும் நல்ல கொழுப்பைக் கூட்டு வதிலும் பயன் தரும்.

   
 • கரப்பான், காளான்படை முதலான தோல் நோய்களுக்கும் மல்லி விதை எண்ணெய் தீர்வளிக்கிறது.

   
 • தேநீர் தயாரிக்கும்போது மல்லி விதை, சுக்கு கொஞ்சம் சேர்த்துக் கொதிக்கவிட்டு அருந்தினால் வயோதிகத்தில் ஏற்படும் மலச்சிக்கலை நீக்கலாம். ‘மல்லி விதைத் தேநீர்’ குடலின் தசை இயக்கத்தைத் தூண்டி மலச்சிக்கலைத் தணிக்கிறது.

 • சுக்கு, தனியா, பனைவெல்லம் சேர்ந்த கஷாயத்தை வாரம் ஒரு முறை குடிப்பது அஜீரணம் ஏற்படாதிருக்க உதவும்.

 • மல்லி விதையில் உள்ள 85 விதமான மண மூட்டும் எண்ணெய்களில் 26 வகை எண்ணெய்கள் மருத்துவக் குணமுள்ளவை. ‘லினாலூல்’, ‘ஜெரானில் அசிடேட்’ ஆகிய மணமூட்டிகள்தான் மல்லி விதையின் மருத் துவத் தன்மைக்குக் காரணங்கள். இவையே உடல் செல்களைப் பாதுகாக்கும் ஆண்ட்டி ஆக்ஸிடன்ட் தன்மையைத் தருகின்றன.

 • அதனால் அடுத்த முறை சாம்பாரோ, ரசமோ, வற்றல் குழம்போ வைக்கும்போது மறக்காமல் மல்லி விதையைச் சேருங்கள்.

Comments

Leave a Comment