எங்க ஊரு இட்டேரி எனும் ஈகோ சிஸ்டம்!

பல்லுயிர்பெருக்கம் எப்படி செயல்படுகிறது
முன்னொரு காலத்தில், அதிகமில்லை சுமார் இருபது வருடங்கள் முன்பு, கிராமங்கள் இட்டேரிகளால் இணைக்கப்பட்டு இருந்தன. இட்டேரி என்பது கொங்கு நாட்டு சொல். இருபுறமும் அடர்ந்த வேலி. நடுவில் ஒற்றையடிப் பாதை அல்லது மாட்டுவண்டித் தடம். இதுவே இட்டேரி என்று இங்கே அழைக்கப்படும். மற்ற ஊர்களில் என்ன பெயர் என்று தெரியவில்லை. 

இந்த இட்டேரி என்பது "ஒரு தனி உலகம்." இதை நான் "Itteri eco-system" என்று அழைப்பேன்.  கள்ளி வகைகள், முள்ளுச்செடிகளுக்கு இடையே, வேம்பு, மஞ்ச கடம்பு, நுணா, புரசு போன்ற மரங்கள், நொச்சி, ஆடாதொடை, ஆவாரம் போன்ற செடிவகைகள், பிரண்டை, கோவை போன்ற கொடிவகைகள், மற்றும் பெயர் தெரியாத எண்ணற்ற புற்பூண்டுகள் நிறைந்திருக்கும்.

இவை உயிர்வேலியாய் விவசாய நிலங்களை காத்து வந்தன. இங்கு எண்ணற்ற உயிர்கள் வாழ்ந்து வந்தன. கறையான் புற்றுகள் , எலி வங்குகள் நிறைய காணப்படும். நிழலும் ஈரமும், இலைக்குப்பைகளும் எப்போதும் காணப்படுவதால் எண்ணற்ற பூச்சியினங்கள் காணப்படும்.

இவற்றை உணவாக கொள்ள வண்டுகள் , நண்டுகள்  பாம்புகள், பாப்பிராண்டிகள்,  உடும்புகள், ஓணான்கள், கோழிகள், குருவிகள்  அலுங்குகள், ஆமைகள் இப்படி பல உயிர்களும் இவற்றை உணவாக கொள்ள 
பாம்புகள் , பருந்துகள், நரிகள் போன்றவையும் இருந்தன. மனிதர்களுக்கு கோவப்பழம், கள்ளிப்பழம், சூரிப்பழம், பிரண்டைப்பழம், போன்ற சுவையான கனிவகைகளும், கோவைக்காய், களாக்காய், பிரண்டை கொழுந்து, சீகைக்கொழுந்து என்று சமையலுக்கு உதவும் பொருட்களும் மூலிகைகளும் கிடைத்தன.  இங்கே பலருக்கும் பள்ளிப் பருவத்தில் விடுமுறை நாட்களில்  ஓனானைக்கண்டால் ஓட ஓட விரட்டு பாப்பிராண்டி கண்டால் பாவம்ன்னு விடு என்று ஓனான் வேட்டைக்குப் போன அனுபவம் கண்டிப்பாக இருக்கும். 

1. கடவு

சில சமயம் தோட்டத்தைச் சுற்றி வேலி நீண்டுகொண்டே போகும். ஒரு கல் தொலைவெல்லாம் தாண்டி தான் வழியிருக்கும். அப்படி இருக்கும் சமயத்தில் வேலியில் கொஞ்சம் முள்ளை நீக்கி ஓட்டை போட்டு அந்த வழியைப் பயன்படுத்துவார்கள். (By-pass). இதற்குக் கடவு என்றுபெயர்.

2. தொக்கடா

"இது என்ன இந்தியன் படப்பாடல் வரிமாறி இருக்கே" என்று யோசிக்காதீர்கள். இதுவும் ஒரு அழகான சொல். நாம் மட்டும் தான் கடந்து போக வேண்டும், கால்நடைகள் கடக்கக் கூடாது. அப்பொழுது என்ன செய்வது? மனிதர்கள் மட்டும் தாண்டும் வகையில் பட்டியில் ஒரு வழி அமைத்துவிடுவார்கள் (இடுப்பு உயரத்திற்கு கீழ் வழியில் கட்டை கட்டி அடைத்துவிடுவார்கள்.) இதற்குத் தொக்கடா என்று பெயர். ஆடு தாண்டாத என்று கேட்கலாம். ஆடுகளின் கால்களைக் கட்டிவைத்திருப்பார்கள் இதற்கு அன்னான்கால்னு சொல்லுவாங்க (முன்னங்காலில் ஒன்றோடு பின்னங்காலின் எதிர் பக்கக் காலோடு சேர்த்து அதனை விரைந்து ஓடாமல் கட்டி வைப்பார்கள்). அதனால் அவற்றால் தாண்ட முடியாது.

3. தொண்டு பட்டி

பட்டிகள் பற்றிப் பேசிக்கொண்டிருக்கும் போது இச்சொல் நினைவிற்கு வந்தது. சுற்றி வேலியால் அடைத்த பகுதியில் இரண்டொரு மாடு ஆடு வைக்கற்போர் வைக்கக் கொஞ்சம் இடம், ஒரு குட்டிச் சாலை, இப்படி இருக்கும் இடத்தை தொண்டுபட்டி என்பார்கள். (மற்ற வட்டாரங்களில் எதைத் தொண்டுபட்டி என்பார்கள் என்று எனக்குத் தெரியவில்லை).

4. வெள்ளதாரை

sink / wash basin என்றெல்லாம் வீட்டில் பேசிக்கொண்டிருந்த போது சலதாரை என்னும் சொற்பயன்பாடு அழிந்துவருவதைக் கண்டேன். சலம்- வடமொழி என்பதாலோ என்னவோ அது வழக்கொழிந்து போவதில் எனக்குப் பெரிதாய்க் கவலை ஏதுமில்லை. இதைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்த போது என் அம்மா வெள்ளதாரையைப் பற்றி நினைவுபடுத்தினார்.

மழை பெய்யும் போது தோட்டங்காடு, புன்செய் நன்செய் என்றிருக்கும் இடங்களில் மழைநீர் ஓடும். ஓடை, ஆறு இவற்றில் சேர்க்கமுடியாத நீர் போகும் பாதையை வெள்ளதாரை என்பார்கள். இங்கும் அடித்துவரப்பட்ட மண் சேர்ந்திருக்கும். அங்கு எந்தச் செடிகளும் வளர்வதில்லை. எல்லா நாளும் நீர் போகாமல் அடைமழை காலங்களில் மட்டும் நீரோடும் வெள்ளதாரையைச் சிறு வயதில் கண்டிருக்கிறேன். அதிலும் நீர் இருக்கும் போது கண்டதாய் நினைவில்லை. நீரின் தாரையை மட்டுமே கண்டிருந்தேன். இந்த வேலியில் வாழ்ந்த எண்ணற்ற குருவிகள், ஓனான்கள், தவளைகள்  பயிர்களை சேதப்படுத்தும் பூச்சிகளை அழித்தொழித்தன.  பாம்புகள், ஆந்தைகள்  எலிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தின. பறவைகளின் எண்ணிக்கையை பாம்புகளும், வல்லூறுகளும் கட்டுப்படுத்தின.  பாம்புகளின் எண்ணிக்கையை மயில்கள் கட்டுப்படுத்தின. "மான் மயில்களின் எண்ணிக்கையை நரிகளும், காட்டுப்பூனைகளும் கட்டுப்படுத்தின." ஆனால் இன்று..? ஏலியன்கள் பூமியை அழிப்பது போல் வெறி கொண்டு இந்த உலகத்தை அழித்து விட்டோம். 

விவசாய நிலங்கள் ப்ளாட்டுகள் ஆன போது இந்த வேலிகளும் அழிந்தன. வண்டித்தடங்கள் தார் சாலைகள் ஆன போது இட்டேரிகள் மறைந்தன. கொஞ்சம் நஞ்சம் மிஞ்சியிருக்கும் விவசாய நிலங்களுக்கு உயிர் வேலியை அழித்து காக்கா குருவி கூட கூடு கட்டாத கம்பிவேலிகள் அமைக்கப்பட்டன. இதனால் எண்ணற்ற ஜீவராசிகள் வாழ இடமின்றி போனது. அதில் முக்கியமானது குள்ளநரிகள். இவை மான்கள் மற்றும் மயில்களுக்கு முக்கியமான எதிரிகள். இவை மான் குட்டிகளை, மயில்களின் முட்டைகளையும், குஞ்சுகளையும் தந்திரமாக கவர்ந்து உணவாக்கிக்கொள்ளும்.  இவற்றை நாம் எங்கும் காண முடியவில்லை. காடுகளில் மட்டும் ஓரிரு ஜோடிகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக காணப்படுகின்றன. விளைவு மான் மற்றும் மயில்களின் எண்ணிக்கை பன்மடங்கு பெருகி விட்டன. " நாம் விதைத்தது நாம் அறுவடை செய்கிறோம்." கொள்ளிக்கட்டையால் சொரிந்து கொண்டால் புண்ணாகத்தான் செய்யும். மான், மயில்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த வேண்டும் என்றால் மீண்டும் உயிர்வேலி முறைக்கு மாறுங்கள். இல்லையேல் இழப்புகளை அனுபவிக்கத்தான் வேண்டும்.

கட்டுரையாளர்: கெகதீஷ் வி.கே.பி.

தமிழகத்தின் இட்டேரி

Comments

  • Chet

    4 months ago

    For the reason that the admin of this site is working, no uncertainty very shortly it will be renowned, due to its feature contents. collagen select

Leave a Comment