காங்கிரஸ் கட்சிக்குத் திடமான தலைவர் கிடைப்பாரா? இன்று தெரியும்!

கடந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட தோல்வியைத் தொடர்ந்து அதற்குப் பொறுப்பேற்கும்விதமாக, அக்கட்சியின் தலைவர் பதவியை வகித்து வந்த ராகுல் காந்தி ராஜினாமா செய்தார். அதைத் தொடர்ந்து தலைவர் இல்லாத கட்சியாக காங்கிரஸ் இருப்பது சரியல்ல என முடிவு செய்த காரியக் கமிட்டி,  இடைக்காலத் தலைவராக சோனியா காந்தியைத் தேர்வு செய்தது. ஆனால், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 10-ஆம் தேதியிலிருந்து தற்போதுவரை ஓராண்டுக்கும் மேலாக இடைக்காலத் தலைவர் நீடித்துவருவது கட்சிக்கு நிலையான தலைமையைக் கேட்பவர்கள் மத்தியில் அதிருப்தி அதிகரித்திருப்பதை காரியக் கமிட்டி உணர்ந்துள்ளதாகத் தெரிகிறது.

அம்மாவா? மகனா?

அதேநேரம் திடமான தலைமை தொடர்பான விவகாரத்தில் கட்சிக்குள் இருவித கருத்துகள் வலுவாக எழுந்துள்ளன. வலுவான முழுநேரத் தலைமை என்ற கோணத்தில், காங்கிரஸின் பெரும்பான்மைத் தொண்டர்களால் அன்னை சோனியா காந்தி என்று முழு மனதுடன் ஏற்றுக்கொள்ளப்பட்ட அவரை முன்னிறுத்தினால் அதை எதிர்க்க ஒரு தரப்பு எதிர்ப்பு தயாராக இருப்பதாகத் தெரிகிறது. மற்றொரு தரப்பினர் ராகுல் காந்தியே திடமான தலைமைப் பொறுப்பை ஏற்க வேண்டும் என கூறி வருகின்றனர்.  இதனால், காங்கிரஸின் அடுத்த திடமான தலைமை ‘தாயா அல்லது சேயா?’ என்ற குழப்பமும் ஆதரவும் எதிர்ப்பும் என அக்கட்சி பரிதவித்து வருகிறது.

பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, முன்னாள் மத்திய அமைச்சர்கள் அஸ்வானி குமார், சல்மான் குர்ஷித் ஆகியோர் காந்தி குடும்பத்துக்கு ஆதரவாக இருக்கிறார்கள். ஆனால், குலாம் நபி ஆசாத், ஆனந்த் சர்மா, கபில் சிபல், முகுல் வாஸ்னிக், மணிஷ் திவாரி, சசி தரூர், ஹரியாணா முன்னாள் முதல்வர் பூபேந்திரசிங் ஹூடா ஆகியோர் காங்கிரஸ் தலைமைக்கு புத்துணர்ச்சி மிக்க முழுநேரத் தலைமை அவசியம் எனக் கோரி வருகின்றனர்.

குவிந்த கடிதங்களும் ராஜினாமா வதந்தியும்

காங்கிரஸ் கட்சியின் திடமான தலைமை விவகாரம் குறித்து முன்னாள் முதல்வர்கள், முதல்வர்கள், எம்.பி.க்கள், மூத்த நிர்வாகிகள் பலரும் ‘காங்கிரஸ் கட்சிக்கு தலைமை மாற்றம் காலத்தின் கட்டாயம்’ என்ற த்வணி வெளிப்படும்விதமாக சோனியா காந்திக்குக் கடிதங்களை எழுதியிருப்பதாகத் தெரிகிறது.. அந்தக் கடிதங்கள் கூறப்பட்டுள்ள கருத்துக்கள் குறித்து இன்று நடக்கும் காரியக் கமிட்டிக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் எனத் தெரியவருகிறது. இந்தக் கடித விவகாரம் வெளியே தெரிந்தவுடன், சோனியா காந்தி தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டதாக நேற்று தகவல்கள் வெளியாயின. ஆனால், இதற்கு மறுப்புத் தெரிவித்த காங்கிஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, தலைவர் பதவியில் சோனியா காந்தி தொடர்கிறார். அவ்வாறு வரும் செய்திகள் தவறானவை என விளக்கம் அளித்தார். இன்று நடக்கும் காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டத்தில் சோனியா காந்தி தனது தலைவர் பதிவியை ராஜினாமா செய்வாரா அல்லது புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதில் ஏதேனும் முக்கிய முடிவு எடுக்கப்படுமா என்பதுதான் இப்போது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இதற்கிடையில் காங்கிரஸில் உள்ள 50 வயதுக்கும் குறைவான இளைஞர்கள் #MyLeaderRahulGandhi என்ற ஹேஷ் டேக்கினை சமூக வலைதளங்களில் பரப்புரை செய்து வருகிறார்கள்.


Comments