ரஜினி சொன்ன எம்ஜிஆர் ஆட்சியில் என்ன நடந்தது?


கடந்த 2017-ல் முழு நேர அரசியலுக்கு வருவதாக அறிவித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், 2020 டிசம்பர் 29-ம் தேதி உடல்நிலை கருதி அரசியலுக்கு வரப்போவதில்லை என்று அறிவித்தார். ஆனால், இந்த இடைப்பட்டக் காலத்தில் ‘அண்ணா, காமராஜர் வழியில் அரசியல் செய்வேன்’என்று தொடக்கத்தில் சொன்ன நடிகர் ரஜினிகாந்த், பிறகு ஆன்மிக அரசியல் செய்யப்போவதாக அறிவித்தார். அரசியல் விலகல் அறிவிப்புக்கு முன்பு எம்ஜிஆர் தந்த நல்லாட்சியைத் தரப்போவதாக அறிவித்திருக்கிறார். “ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலை இல்லே” என்று பாடி, “என் வழி தனி வழி” என்று ‘பஞ்ச்’ வசனம் பேசிய ரஜினிகாந்த், எம்ஜிஆர் ஆட்சி அமைப்பேன் என்று கூறியதன்  பின்னணி என்ன? அப்படி எதையெல்லாம் சாதித்திருந்தது எம்ஜிஆர் ஆட்சி? அதை நுணுக்கமான ஆதாரங்களுடன் அலசுகிறது இந்தக் கட்டுரை:

எம்ஜிஆர் முதல்வராகப் பதவியேற்றபோது அவர் மீது ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் இருந்தன.

காரணம், திரைக்கு உள்ளே வெல்ல முடியாத நாயகனாக வலம்வந்து, திரைக்கு வெளியே அரசியல் களத்தில் கருணாநிதிக்கு எதிராக ஊழல் ஒழிப்பு இயக்கம் நடத்தியவர் எம்ஜிஆர். வாரி வழங்கும் வள்ளலாகவும், தவறுகளைத் தட்டிக்கேட்கும் துணிச்சல் கொண்டவராகவும் அறியப்பட்ட அவர், முதலமைச்சர் எனும் பெரும் பொறுப்பை எப்படிக் கையாளப்போகிறார் என்பதுதான் அந்த எதிர்பார்ப்புகளின் பின்னணி.

தமிழகத்தில் திமுக அரசு கலைக்கப்பட்டு, ஆளுநர் ஆட்சி அமலில் இருந்தபோது காவிரி நீர்ப்பங்கீடு தொடர்பாகத் தமிழகத்துக்கும் கர்நாடகத்துக்கும் இடையே ஒப்பந்த வரைவு ஒன்றைத் தயாரித்திருந்தது மத்திய அரசு. எம்ஜிஆர் முதல்வரான பிறகு, அந்த ஒப்பந்த வரைவை அவர் ஏற்பார் என்று மத்திய அரசு கணித்தது.

ஆனால், ஒப்பந்த வரைவில் இருந்த தமிழகத்துக்குப் பாதகமான அம்சங்களை அதிகாரிகள் சுட்டிக்காட்ட, ஒப்பந்தத்தை நிராகரித்தார் எம்ஜிஆர். காவிரி விவகாரத்தில் அவர் எடுத்த முக்கிய முடிவு அது. அதன் பிறகு காவிரி நதிநீர் பிரச்சினையைத் தீர்க்க நடுவர் மன்றம் அமைக்கக் கோரி 1986-ல் மத்திய அரசுக்குக் கடிதம் எழுதினார் எம்ஜிஆர்.

பின்னாளில் அமைந்த காவிரி நடுவர் மன்றம் அவர் எழுதிய கடிதத்தை அடிப்படையாக வைத்தே காவிரிப் பிரச்சினையை விசாரித்தது. அந்த வகையில் காவிரி விவகாரத்தில் எம்ஜிஆரின் பங்களிப்பு முக்கியமானது.

கண்டிப்பான மதுவிலக்கு

மதுவிலக்கு என்பது எம்ஜிஆரின் மனத்துக்கு நெருக்கமான கோரிக்கை. என் தாய் மீது ஆணையாக மதுவிலக்கை ரத்துசெய்ய மாட்டேன் என்று சொல்லி ஆட்சிக்கு வந்தவர் எம்ஜிஆர். சொன்னதுபோலவே ஆட்சிக்கு வந்ததும் மதுவிலக்கைத் தீவிரமாகச் செயல்படுத்தினார். சட்டங்கள் திருத்தப்பட்டன. தண்டனைகள் கடுமையாக்கப்பட்டன.  

ஆனால், அவரே பின்னாளில் மதுவிலக்கை ரத்துசெய்து, கள்ளுக் கடைகளை ஏலம்விட்டு, சாராயக் கடைகளை நடத்த அனுமதியும் அளித்தார்.

அதற்கு கள்ளச் சாராயம் ஏற்படுத்திய சட்டம் - ஒழுங்குப் பிரச்சினை ஒரு காரணம். மதுவிலக்குக் கட்டுப்பாடுகளால் அடித்தட்டு மக்களுக்கு ஏற்பட்ட அதிருப்தி மற்றொரு காரணம்.  தேர்தல் தோல்விக்கு அந்த அதிருப்தியும் ஒரு காரணமாக இருந்தது.  எல்லாம் சேர்ந்துகொள்ளவே, தான் செய்த  சத்தியத்தை மீறினார் எம்ஜிஆர்.

டாஸ்மாக்கின் ஆரம்பம்


சாராயம் உற்பத்திசெய்ய பத்து தனியார் நிறுவனங்களுக்கும், சாராய மொத்த விற்பனையைச் செய்ய பதினைந்து தனியார் நிறுவனங்களுக்கும், இந்தியத் தயாரிப்பு வெளிநாட்டு மதுவைத் தயாரிக்க நான்கு தனியார் நிறுவனங்களுக்கும் எம்ஜிஆர் அரசு அனுமதி கொடுத்தது. ஒருகட்டத்தில், டாஸ்மாக் என்ற அரசு நிறுவனத்தையே ஆரம்பித்தார் எம்ஜிஆர்.

தனியார் நிறுவனங்களிடமிருந்து சாராயத்தை மொத்தமாக வாங்கி, அவற்றைச் சில்லறை வியாபாரிகளுக்கு விற்பனை செய்யும் பணியை டாஸ்மாக் நிறுவனம் செய்தது. இந்த நிறுவனம்தான் கருணாநிதி ஆட்சியில் மது தயாரிப்பில் ஈடுபட்டது. ஜெயலலிதா ஆட்சியில் மது நேரடி விற்பனையில் இறங்கியது. அனைத்துக்கும் ஆரம்பப் புள்ளி எம்ஜிஆர்.

கிராம நிர்வாகத்தில் முற்போக்கு எம்ஜிஆர் ஆட்சியில் முக்கியமான சில முற்போக்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

குறிப்பாக, கிராம நிர்வாக அலுவலர் என்கிற புதிய பதவி உருவாக்கியதைச் சொல்ல வேண்டும். அப்போது ஒவ்வொரு கிராமத்திலும், ஒரு குறிப்பிட்ட சமூகமே பரம்பரை பரம்பரையாகக் கிராமத்தை நிர்வகிக்கும் மணியம், கர்ணம் போன்ற பதவிகளை அனுபவித்துவந்தனர். சமூக நீதிக்கு எதிரான, சாதிய முறைக்கு ஊக்கம் தரும் அந்த முறையை ஒழித்தது எம்ஜிஆர் அரசு.

அதோடு நிறுத்தாமல், கிராம நிர்வாக அலுவலர் பதவியை ஏற்படுத்தி, அந்தப் பதவிகள் சாதி மத வேறுபாடின்றி எல்லோருக்கும் கிடைப்பதற்காக, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையக் கட்டுப்பாட்டில் அதைக் கொண்டுவந்தார் எம்ஜிஆர். அதேபோல, அவரது ஆட்சியில்தான் தெருப் பெயர்களில் சாதிப் பெயர் கூடாது என்ற அரசு உத்தரவும் வெளியானது.

சுயநிதிக் கல்வித் தந்தைகள்

இன்றைக்கு அமலில் இருக்கும் ப்ளஸ் 1, ப்ளஸ் 2 வகுப்புகள் அறிமுகமானது எம்ஜிஆரின் ஆட்சியில்தான். அதேபோல, அவரது ஆட்சியில்தான் சுயநிதிக் கல்லூரிகளாகக் கலைக் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் பலவும் உருவாகின. விளைவு, தமிழக மாணவர்கள் பலருக்கும் கல்லூரிப் படிப்பு படிக்கும் வாய்ப்பு உருவானது.  குறிப்பாக, தேர்வில் சில மதிப்பெண்கள் குறைந்ததன் காரணமாக, அரசுக் கல்லூரிகளில் படிக்கும் வாய்ப்பை இழந்த மாணவர்கள், தாங்கள் விரும்பிய படிப்பைப் படிப்பதற்கான வாய்ப்பு உருவானது.

சோகம் என்னவென்றால், எம்ஜிஆர் காலத்தில் உருவான சுயநிதிக் கல்லூரிகளால் மாணவர்களைவிட அதிமுகவின் முன்னணித் தலைவர்களே அதிக பலன் பெற்றனர். எம்ஜிஆருக்கு நெருக்கமான எம்.பி., எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள் பலரும் எம்ஜிஆர் ஆட்சியில் அனுமதி பெற்று, அரசிடமிருந்து குறைந்த விலையில் நிலங்கள் வாங்கி, கல்லூரிகள் கட்டி, ஏகப்பட்ட லாபமடைந்து, கல்வித் தந்தைகளாக மாறினர். அதேசமயம், உயர் கல்வியில் தமிழகம் இன்றைக்குப் பேர் சொல்லும் அளவுக்கு இருப்பதற்கு இதையும் ஒரு காரணமாகச் சொல்பவர்களும் உண்டு.

பெரியார் நூற்றாண்டும் பொருளாதார இடஒதுக்கீடும்

பெரியாரின் நூற்றாண்டைக் கொண்டாடிய எம்ஜிஆர் அரசு, ‘பெரியாரின் பொன்மொழிகள்’ நூலுக்குக் காங்கிரஸ் ஆட்சியில் போடப்பட்ட தடையை நீக்கியது. பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தத்துக்குத் தமிழக அரசின் அங்கீகாரத்தைத் தந்ததோடு, அந்த எழுத்துகளை அரசுப் பணிகளில் பயன்படுத்தவும் உத்தரவிட்டார் எம்ஜிஆர்.

இங்கே முரண் என்னவென்றால், பெரியாரின் நூற்றாண்டைக் கொண்டாடிய அதே எம்ஜிஆர்தான், பெரியாரின் உயிர்நாடிக் கொள்கைகளுள் ஒன்றான சமூக நீதிக்கு எதிரான பொருளாதார இடஒதுக்கீட்டைக் கொண்டுவந்து அதிர்ச்சி கொடுத்தார். திமுக ஆட்சிக் காலத்தில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 31% இடஒதுக்கீடு இருந்தது. அதனைப் பெற ஆண்டு வருமானம் ரூ.9,000-க்குக் குறைவானதாக இருக்க வேண்டும் என்ற புதிய உத்தரவைப் பிறப்பித்தார் எம்ஜிஆர்.

அந்த உத்தரவு கடும் சர்ச்சையைக் கிளப்பியது. போராட்டங்கள் வெடித்தன. அடுத்து வந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்தது. விவகாரத்தின் வீரியத்தைப் புரிந்துகொண்ட எம்ஜிஆர், உடனடியாக ரூ.9,000 உச்சவரம்பைத் திரும்பப் பெற்றதோடு, 31% இடஒதுக்கீட்டை 50% ஆக உயர்த்தி, மக்களின் நம்பிக்கையை மீட்டெடுத்தார்.

நசுக்கப்பட்ட நக்சலைட்டுகள்

வட ஆற்காடு, தர்மபுரி மாவட்டங்களில் நக்சல்பாரிகளின் செயல்பாடுகள் மிகுதியாக இருந்தன. காவல் நிலையங்களுக்குத் தீவைப்பது, வெடிகுண்டுகள் வீசுவது, கொள்ளையடிப்பது என்பன போன்ற காரியங்களில் நக்சல்பாரிகள் ஈடுபடுவதாகத் தொடர்ச்சியாக செய்திகள் வந்தன. அந்தப் பகுதிக்குச் சென்று நிலைமையைப் பார்வையிட்ட எம்ஜிஆர், நக்சல்பாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

‘ஆபரேஷன் நக்சலைட்டுகள்’ என்கிற நடவடிக்கையைக் காவல் துறை உயரதிகாரிகளான மோகன்தாஸ், வால்டர் தேவாரம் வசம் ஒப்படைத்தார் எம்ஜிஆர். துப்பாக்கிச் சூடுகள் அடுத்தடுத்து நடந்ததன் விளைவாகப் பலரும் பலியாகினர். காவல் துறையினருக்குச் சர்வ அதிகாரமும் தரப்பட்டிருப்பதால், மனித உரிமைகள் அப்பட்டமாக மீறப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

எம்ஜிஆர் எடுத்த துணிச்சலான நடவடிக்கைதான் தமிழகத்தில் நக்சலைட்டுகள் நடமாட்டம் இல்லாமலும், தீவிரவாதம் பரவாமலும் இருக்கக் காரணம் என்று ஒருதரப்பும், நக்சலைட்டுகள் என்ற பெயரில் அரசியல் எதிரிகளை ஒழித்ததும் மனித உரிமைகளைக் கண்ணை மூடிக்கொண்டு மீறியதும்தான் எம்ஜிஆர் அரசின் நக்சல் ஒழிப்பு நடவடிக்கை சாதித்தவை என்று இன்னொரு தரப்பும் விமர்சித்தன.

சத்துணவுத் திட்டம்


ஏழைகளுக்கு உதவிடும் வகையில் ஏதேனும் ஒரு திட்டத்தைக் கொண்டுவர விரும்பினார் எம்ஜிஆர். அப்போது காமராஜரின் மதிய உணவுத் திட்டம் அமலில் இருந்தது. அதனை மேம்படுத்தி, சத்துணவுத் திட்டமாகக் கொண்டுவந்தார். பள்ளிக்கு வரும் ஏழை மாணவர்களுக்கு நல்ல சத்தான காய்கறிகளைக் கொண்டு, சுகாதாரமான இடத்தில் வைத்து, சமைத்துத் தர வேண்டும் என்ற நோக்கத்துடன் கொண்டுவரப்பட்டுள்ள திட்டம்தான் சத்துணவுத் திட்டம் என்று குறிப்பிட்டார்.

இந்தத் திட்டத்தைக் கொண்டுவருவதற்கு முன்னர், அதிகாரிகள் அனைவரும் எதிர்மறைக் கருத்துகளையே முன்வைத்தனர். அதிகம் செலவு பிடிக்கும் காரியம், நிதிச் சிக்கலை உருவாக்கும், மத்திய அரசு உதவிக்கு வராது என்று ஏகப்பட்ட தடைக்கற்கள். ஆனாலும், பிடிவாதத்துடன் அந்தத் திட்டத்தைக் கொண்டுவந்தார். எம்ஜிஆர் என்ற தலைவர், கடவுளாகக் கொண்டாடப்பட்டது சத்துணவுத் திட்டத்துக்குப் பிறகுதான்!

கச்சத்தீவில் முதல் கொலை


கச்சத்தீவு இலங்கைக்குத் தாரை வார்க்கப்பட்டபோது அந்த முடிவைக் கடுமையாக எதிர்த்து, “கச்சத்தீவை மீட்க கச்சை வரிந்துகட்டுவோம்” என்று முழங்கியவர் எம்ஜிஆர்.

ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு கச்சத்தீவை மீட்க எந்தவொரு சட்ட நடவடிக்கையையும் அவர் எடுக்கவில்லை. பின்னாளில் கச்சத்தீவு மீட்புக்காக ஜெயலலிதா வழக்கு தொடர்ந்ததை இங்கு நினைவு கூர்ந்தால், எம்ஜிஆர் ஏன் வழக்கு தொடரவில்லை என்ற கேள்வியின் நியாயத்தைப் புரிந்துகொள்ளலாம்.

கச்சத்தீவில் மீன்பிடிக்க வந்த தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படும் செய்திகளைக் கேட்டிருப்பீர்கள். அந்தக் கொலைகளுக்கெல்லாம் ஆரம்பப் புள்ளி வைக்கப்பட்ட நாள் 13 ஆகஸ்ட் 1983. அன்றைய தினம்தான் இலங்கைப் பகுதிக்குள் நுழைந்து மீன் பிடித்ததாகச் சொல்லி, தமிழக மீனவரை முதன்முறையாகச் சுட்டுக் கொன்றது இலங்கை கடற்படை. அப்போது ஆட்சியில் இருந்தவர் எம்ஜிஆர்.

இலங்கைத் தமிழர் நலன்

இலங்கையில் ஈழத்தமிழர்களுக்கு எதிராக இனக்கலவரம் வெடித்தபோது தமிழகத்தின் முதலமைச்சராக இருந்தவர் எம்ஜிஆர். குறிப்பாக, 1983 ஜூலை கலவரம் வெடித்து, ஈழத்தமிழர்கள் கொலைவெறித் தாக்குதலுக்கு உள்ளானபோது தனது கண்டனங்களைப் பகிரங்கமாகப் பதிவுசெய்தார் எம்ஜிஆர். முதலமைச்சர் பதவியில் இருந்தாலும்கூட அதைப் பற்றிக் கவலைப்படாமல் கருப்புச்சட்டை அணிந்தபடியே வலம்வந்து தனது கோபத்தையும் அதிருப்தியையும் வெளிப்படுத்தினார் எம்ஜிஆர்.

ஒருகட்டத்தில், தமிழீழம் கோரிப் போராடி வந்த போராளி இயக்கங்களுக்குத் தார்மீகரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் உதவிக்கரம் நீட்டத் தயாரானார் எம்ஜிஆர்.

தமிழீழக் கோரிக்கையை வலியுறுத்திப் பல்வேறு போராளி இயக்கங்கள் செயல்பட்டுவந்தபோதும் எம்ஜிஆரின் தேர்வு பிரபாகரன் தலைமையிலான விடுதலைப்புலிகள் இயக்கம்தான். அவர்களுடைய ஆயுதம், பயிற்சிகளுக்காக இரண்டு கோடி ரூபாயைக் கொடுத்து உதவியதாக விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் ஆண்டன் பாலசிங்கம் பதிவுச்செய்திருக்கிறார்.

சில ஆண்டுகள் கழித்து மீண்டும் நிதியுதவி கோரியபோதும் மறுக்காமல் செய்திருக்கிறார் எம்ஜிஆர். விடுதலைப்புலிகளின் வளர்ச்சி வரலாற்றில் எம்ஜிஆர் கொடுத்த தார்மீக ஆதரவும் நிதியுதவியும் முக்கியமான அத்தியாயங்கள்.

குண்டர் சட்டம்


இன்றைக்குப் பரபரப்பாகப் பேசப்படும் குண்டர் சட்டம் அமலுக்கு வந்தது எம்ஜிஆர் ஆட்சியில்தான். அந்தச் சட்டத்தின் முழுப் பெயர், ‘சட்ட விரோத மது தயாரிப்பாளர்கள், போதைப் பொருள் கடத்தல்காரர்கள், வன்முறையாளர்கள், சட்ட விரோத பொருள் கடத்தல்காரர்கள், நில அபகரிப்பாளர்கள் தடுப்புச் சட்டம்’.

சுருக்கமாக, வன்முறையாளர் தடுப்புச் சட்டம். இந்தச் சட்டத்தின்படி, ஒருவர் குற்றம் புரிவதற்கு முன்பே அதைத் தடுப்பதற்காக அவரைக் கைதுசெய்ய முடியும். அப்படிக் கைதானவர்களை எந்த விதமான விசாரணையையும் மேற்கொள்ளாமல் ஓராண்டுக்குச் சிறையில் அடைத்துவைக்கவும் முடியும். இடைப்பட்ட காலத்தில் பிணை கிடைக்காது. இன்றளவும் கடுமையாக விமர்சிக்கப்படும் சட்டம் இது.

அரசியல்வாதிகள் ஆட்சிக்கு வரும்போது ஒருவிதமாகவும், ஆட்சி போன பிறகு இன்னொரு விதமாகவும் பார்க்கும் சட்டங்களில் இதுவும் ஒன்று!

தெலுங்கு கங்கையும் கருப்புச் சட்டமும்

வெறும் பேச்சளவில் மட்டுமே இருந்த கிருஷ்ணா நதிநீர்த் திட்டத்தை அடுத்த கட்டத்துக்குக் கொண்டுவந்தவர் எம்ஜிஆர். அவர் நடத்திய பேச்சுவார்த்தையின் பலனாக சென்னைக்குத் தண்ணீர் தரச் சம்மதித்தார் என்.டி.ராமாராவ்.

பிரதமர் இந்திரா காந்தி முன்னிலையில் தமிழக முதல்வர் எம்ஜிஆரும் ஆந்திர முதல்வர் என்.டி.ஆரும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். அந்தத் திட்டத்தின் பெயர், ‘தெலுங்கு கங்கைத் திட்டம்’.

கருணாநிதி அரசுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து, மிகப் பெரிய போராட்டங்களை முன்னெடுத்தவர் எம்ஜிஆர். கருணாநிதி உள்ளிட்டோர் மீது சர்க்காரியா விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டதற்குக் காரணமே எம்ஜிஆர் கொடுத்த ஊழல் புகார்ப் பட்டியல்தான். ஆனால், அப்போது பொதுவாழ்வில் ஈடுபட்டிருப்போர் குற்றச் செயல்களின் ஈடுபட்டால் அதைத் தடுப்பதற்காக குற்றத்தடுப்பு மசோதா என்ற பெயரில் கருணாநிதி அரசு ஒரு மசோதாவைக் கொண்டுவந்தது.

அப்போது, அதனை எம்ஜிஆர் தீவிரமாக எதிர்த்தார். அரசியல் எதிரிகளை ஒடுக்குவதற்காகவே இந்தச் சட்டத்தை தி.மு.க. அரசு கொண்டுவந்தது என்ற விமர்சனங்களும் அப்போது உண்டு. தான் ஆட்சிக்கு வந்ததும் அந்த மசோதாவைக் கருப்புச் சட்டம் என்று சொல்லி, அதை  எம்ஜிஆர் ரத்துசெய்துவிட்டார்.

வரிவசூல் விமர்சனம்

உலகத் தமிழ் மாநாடு, தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகம் என்பன போன்ற நற்காரியங்கள் பல நடந்த அதேவேளையில், உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேர்தல் நடத்தாமல் தனி அதிகாரிகள் மூலம் வெகுகாலத்துக்கு உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகித்தது, தமிழ்நாடு சட்டமன்ற மேலவையை நீக்கியது, வன்னியர் சங்கத்தின் சாலை மறியல் போராட்டத்தின்போது துப்பாக்கிச்சூடு நடத்தி சுமார் 30 பேர் பலியானது என்று விமர்சனத்துக்குரிய பல காரியங்களும் எம்ஜிஆர் ஆட்சியில் நடந்திருக்கின்றன.

எம்ஜிஆர் ஆட்சி மீதான முக்கிய விமர்சனம் வரி வசூல் தொடர்பானது. குறிப்பாக, ஏழைகளின் பங்காளனாக அறியப்பட்ட எம்ஜிஆரின் ஆட்சிக் காலத்தில் ஏழைகள், நடுத்தர மக்களிடமிருந்துதான் அதிக அளவில் வரிவசூல் செய்யப்பட்டது என்றும், பணக்காரர்கள், தொழிலதிபர்களிடமிருந்து குறைவான அளவிலேயே வரிவசூல் செய்யப்பட்டது என்றும் பதிவுசெய்திருக்கிறார் ஆய்வாளர் எம்.எஸ்.எஸ்.பாண்டியன்.

தமிழகத்தின் முதலமைச்சராக சுமார் 11 ஆண்டுகள் செயல்பட்ட எம்ஜிஆரின் ஆட்சி என்பது நல்லதும் கெட்ட தும் இரண்டறக் கலந்த ஆட்சி. ரஜினிகாந்த் சொல்வது போல எம்ஜிஆர் ஆட்சி முழுமையான நல்லாட்சி அல்ல. ஏனென்றால், பல ஆண்டுகளுக்கு முன் பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டியளித்த ரஜினிகாந்த், “அரசியலில் தனி மனிதனாக எதுவும் சாதிக்க முடியாது. எம்ஜிஆரையே எடுத்துக்கோங்க… வந்த முதல் ரெண்டு வருஷத்துல எப்படி இருந்தார்? அதுக்கப்புறம் அவரால ஒண்ணும் செய்ய முடியலையே” என்று சொல்லியிருந்தார்.

ஆக, எம்ஜிஆரின் நல்லாட்சி என்று சொல்வதைவிட எம்ஜிஆர் ஆட்சியில் செய்த நல்லவற்றை இன்றைய சூழலுக்கு ஏற்ப, தன்னுடைய ஆட்சியில் செய்வதாக ரஜினிகாந்த் சொன்னால், வரவேற்கலாம்!

கட்டுரையாளர்: ஆர்.முத்துக்குமார், அரசியல் விமர்சகர், எழுத்தாளர்.


Comments

Leave a Comment