ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ஆங்கிலப் படத்தின் ட்ரைலர்!

ஹாலிவுட்டில் அசோக் அமிர்தராஜ், மனோஜ் நைட் ஷியாமளன் உள்ளிட்ட பல தமிழர்கள் முத்திரை பதித்துள்ளனர். அந்த வரிசையில் தற்போது டெல்.கே.கணேசன் வணிக ரீதியில் லாபம் ஈட்டக்கூடிய ஆங்கிலப் படங்களைத் தயாரித்து வருகிறார். இவர் ஏற்கெனவே தயாரித்த  ‘டெவில்’ஸ் நைட்’ என்ற படத்தில் அமெரிக்காவில் குடியேறி வாழ்ந்துவரும் தமிழ் நடிகரான நெப்போலியன் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். 

அந்தப் படத்தைத் தொடர்ந்து தற்போது ‘ட்ராப் சிட்டி’என்ற தனது இரண்டாம் தயாரிப்பில் நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் நடித்துள்ளார். இவர் ஆங்கிலப்படமொன்றில் நடிப்பது இதுவே முதல் முறையாகும். இதில் போலீஸ் வன்முறையில் தாக்கப்படும் ஒரு பாடகருக்குச் சிகிச்சை அளிக்கும் இந்திய டாக்டர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

புகழ்வெளிச்சம் படாத வளர்ந்துவரும் ராப் பாடகர் ஒருவர் போதை பொருள் கடத்தல் தலைவனிடம் பணியாளாக வேலை செய்யும் கதையே டிராப் சிட்டி. ராப்பராக நடிக்கும் ஜாக்ஸன் உருவாக்கும் ஒரு பாடல், அவர் கைது செய்யப்படுவதற்கு சற்று முன்பு மாபெரும் வைரலாகி விடுகிறது. அவரது குற்றம் காரணமாக அவரது இசை புகழ் தீவிரமடைகிறது என்றாலும், ஒரு அபாயகரமான துப்பாக்கிச் சூடு அவரது வாழ்க்கையின் மிகப்பெரிய முடிவை எடுக்க அவரைத் தூண்டுகிறது.

அமெரிக்காவின் மின்னியபாலிஸில் கொல்லப்பட்ட ஜார்ஜ் ஃப்ளாய்டாக இருக்கட்டும் அல்லது சாத்தான்குளத்தில் கொல்லப்பட்ட ஜெயராஜ்-பென்னிக்ஸ் ஆக இருக்கட்டும், அவர்களது கதையுடன் ஒத்துப்போகும் இந்தப் படத்தின் திரைக்கதை 2 ஆண்டுகளுக்கு முன்பே எழுதப்பட்டது. தற்போது இந்தப் படத்தின் ட்ரைலர் வெளியாகியிருக்கிறது.Comments