தப்லீக் ஜமாத் மாநாட்டிற்கு வந்தவர்கள் குற்றமற்றவர்கள்! நீதிபதி டி.வி. நளவாடேயின் தீர்ப்பு முழு விவரம்

கொரொனாவுக்கு தப்லீக் ஜமாத்தும் முஸ்லீம்களுமே காரணம் எனக் கூறி டெல்லி தப்லீக் ஜமாத் மாநாட்டிற்கு வந்த வெளிநாட்டு முஸ்லீம்கள் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார்கள். அவர்கள் மீது வழக்கும் தொடுக்கப்பட்டது. தமிழகத்தில் மசூதிகளில் தங்கியிருந்தவர்களும் கைது  செய்யப்பட்டார்கள். இந்நிலையில் மும்பை உயர் நீதிமன்றம் அவர்கள் மீதான வழக்கை ரத்து செய்துள்ளது. வழக்கை ரத்து செய்துள்ளது மட்டுமல்ல, இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நளவாடே இந்தியாவின் அழகிய மதச்சார்பின்மையின் குரலாக ஒலித்திருக்கிறார்.

டெல்லி நிஜாமுதீன் மாநாட்டில் பங்கேற்ற வெளிநாட்டினர் 29 பேர் மீதான வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி நௌவாடே அளித்த தீர்ப்பின் சாரம்சம் இதோ: “ஒரு பெருந்தொற்று அல்லது பேரிடர் நடக்கும் இந்தச் சூழலில் அரசியல் ரீதியாக இயங்கும் ஓர் அரசு, அதற்கான பலியாடுகளைத் தேட முயல்கிறது. இந்த வெளிநாட்டவர்கள் அத்தகைய பலியாடுகள் ஆக்கப்படத் தேர்வு செய்யப்பட்டார்கள் என்பதற்கான வாய்ப்பு இருப்பதாகவே சூழல்கள் காட்டுகின்றன”

“தப்லீக் ஜமாத் என்பது முஸ்லிம் களின் ஒரு பிரிவு கிடையாது. மதத்தைச் சீர்திருத்தம் செய்ய உருவான ஓர் இயக்கம். ஒவ்வொரு மதமும் காலப்போக்கில் மாற்றத்தைச் சந்திக்கிறது. உலகம் மாறிக் கொண்டே வர, மாற்றங்களை யாரும் தவிர்க்க முடியாது. சமர்பிக்கப்பட்ட ஆவணங்களின்படி இந்த வெளி நாட்டவர்கள் மற்றவர்களை இஸ்லாமிய மதத்திற்கு மாற்றவோ அல்லது மதத்தைப் பரப்பவோ முயற்சித்தார்கள் எனக் கூற முடியாது. அதோடு அவர்கள் இந்திய மொழி களான இந்தி அல்லது உருது மொழியைப் பேசவில்லை. அரபு, ஃப்ரெஞ்சு ஆகிய மொழிகளையே பேசுகிறார்கள். நாம் உண்மையில் இந்தியாவின் பெருமை மிக்க கலாசாரம் மற்றும் பாரம்பரியப்படிதான் நடந்து கொள்கிறோமா என்ற கேள்வி இந்த வழக்கை விசாரிக்கும்போது எழுகிறது.

 கொரோனா பெருந் தொற்றால் ஏற்பட்டுள்ள நெருக்கடி யான சூழலில் நம் நாட்டிற்கு வருகை தரும் இது போன்ற வெளிநாட்டு விருந்தினர்களிடம் நாம் உணர்ச்சி யுடன் நடந்து கொள்ள வேண்டும். அதிக சகிப்புத்தன்மை வேண்டும். அவர்களுக்கு உதவுவதற்குப் பதிலாக, ஆவணங்களில் விதி மீறல், வைரஸ் பரவக் காரணமானவர்கள் எனக் குற்றஞ்சாட்டி நாம் அவர்களைச் சிறையில் தள்ளியிருக்கிறோம்"

”தற்போதைய நடவடிக்கையால் முஸ்லிம்கள் மனதில் அச்சம் கொண்டிருப்பார்கள். முஸ்லிம்கள் என்ன செய்தாலும், எப்படிச் செய்தாலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்ற எச்சரிக்கையை இந்தச் செயல்பாடு காட்டுகிறது. மற்ற நாடுகளைச் சேர்ந்த முஸ்லிம்களுடன் தொடர்பு வைத்திருந்தால்கூட, இங்கு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்பது போல இது இருக்கிறது. இதற்குப் பின்னால் பிறருக்குத் தீமை விளைவிக்கும் எண்ணம் இருப்பதாகத் தெரிகிறது. எனவே மனுதாரர்கள் மீதான வழக்குகளை திரும்பப் பெற வேண்டும்” என்று நீதிபதிகள் தீர்ப்பு வழங்கியுள்ளனர்.

Comments

Leave a Comment