சங்கிகளுக்கு பகத்சிங் மீது வந்த திடீர்க்காதல்

பேராசிரியர் பிபன் சந்திராபாட நூல்களின் ஊடாக பிஞ்சு நெஞ்சுகளில் நஞ்சை விதைப்பது ஒருபக்கம் என்றால் இன்னொரு பக்கம் உலகத் தரமான அறிஞர்களால் நேர்மையாக எழுதப்பட்ட தரமான பாடநூல்களை, குறிப்பாக வரலாற்றுப் பாட நூல்களை ஒழித்துக் கட்டுவது என்பது சங்கிகளின் இன்னொரு பக்கமாக உள்ளது. ஏனெனில் நேர்மையான வரலாறு என்பது அவர்களின் பயங்கரவாத நோக்கங்களுக்கு எதிரானது என்பதை விளக்கிச் சொல்ல வேண்டியதில்லை.

ஐந்தாண்டுகளுக்கு முன் (2005) நடந்த ஒரு சம்பவத்தைப் பார்ப்போம்.

டாக்டர் பிபன் சந்திரா (1928 -2014) அவர்களின்  தலைமையில் மிருதுளா முகர்ஜி, ஆதித்ய முகர்ஜி, கே.என்.பணிக்கர், சுசேதா மஹாஜன் ஆகியோர் உருவாக்கிக் கடந்த 25 ஆண்டுகளாகப் ’இந்திய சுதந்திரப் போராட்ட வரலாறு' (India's Struggle for Independence, 1857-1947) எனும் நூல். டெல்லி பல்கலைக் கழகப் பாட நூலாக இருந்து வந்தது. இவர்கள் அனைவரும் புகழ் பெற்ற வரலாற்றறிஞர்கள். பிபன் சந்திரா நீண்ட காலம் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் வரலாற்றுத் துறைத் தலைவராகவும், 'நேஷனல் புக் டிரஸ்ட்' டின் தலைவராகவும்  இருந்தவர்., இந்திய வரலாற்று மாநாட்டிற்குத் தலைமை தாங்கிய  பெருமையும் (1985) அவருக்கு உண்டு. அவரை இந்துத்துவவாதிகள் அப்போது குறி வைத்தனர். அந்தப் பாடநூலை நீக்க வேண்டும் என்றனர்.

இந்நூலில் உள்ள 39 அத்தியாயங்களில்22 அத்தியாயங்களை எழுதியவர் பிபன் சந்திரா. இந்த நூலின் 20வது அத்தியாயத்தின் தலைப்பு 'பகத்சிங், சூரியாசென் மற்றும் புரட்சிகர பயங்கரவாதிகள்' (Bhagat Singh, Surya Sen and the Revolutionary Terrorists) என்பது. இதில் பயன்படுத்தப்பட்டுள்ள இந்த 'பயங்கரவாதிகள்' எனும் சொல்லை வைத்துக் கொண்டுதான் அன்று அவர்கள் தமது நாடகத்தைத் துவக்கினர்.


ஏப்ரல் 27, 2005 அன்று நாடாளுமன்றத்தில் பா.ஜ.க உறுப்பினர் அனுராக் தாகூர் என்பவர் இப்படிப் பாட நூலில் நமது விடுதலைப் போராட்ட வீரர்களை' பயங்கரவாதிகள்' எனலாமா என ஒரு பிரச்சினையை எழுப்பினார். அமைச்சர் ஸ்மிருதி இரானி எழுந்து இப்படி மரணமடைந்த தியாகிகளைக் கூறுவது "ஒரு கல்வித்துறைப் படுகொலை" என்றார்.

பகத்சிங்கின் பேரன் முறையுள்ள யத்விந்தர் சிங் சந்து, அபேய்சிங் சந்து என்கிற இரு வழித்தோன்றல்களையும் எங்கோ தேடிப்பிடித்துக் கொண்டுவந்து அவர்களையும் களத்தில் இறக்கினர்.

அவர்கள் டெல்லி பல்கலைக்கழகத் துணை வேந்தர் யோகேஷ் தியாகியை அணுகி அந்நூல் திரும்பப் பெற வேண்டும் என்கிற கோரிக்கையை வைத்தனர். பிபன் சந்திராவின் நூல் பாடநூலாக இல்லை எனவும், அது ஒரு reference book ஆகவே வைக்கப்பட்டுள்ளதாகவும் இவர்களின் புகாரைக் கவனிப்பதாகவும் பதிலளித்தார்.

இந்தப் பிரச்சினையை நாம் எப்படிப் பார்ப்பது?

பகத்சிங்கும் தோழர்களும் கொல்லப்பட்டபோது தந்தை பெரியார் உட்பட அதற்கு எதிராகக் கண்டனம் தெரிவித்து இந்தியா முழுவதும் இயக்கம் நடந்தபோதெல்லாம் இதில் இந்துத்துவவாதிகள் யாரும் பங்குபெற்றதில்லை என்பது கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய அம்சம்.

எந்த வகையிலும் பகத்சிங்கை நேசிக்க அவர்களுக்குக் காரணமில்லை. பகத்சிங் தன்னை ஒரு நாத்திகர் என அறிவித்துக் கொண்டவர். இறுதிக் காலத்தில் இடதுசாரிக் கொள்கை உடையவராகவும் அவர் தன்னை வெளிப்படுத்திக் கொண்டார். இன்றளவும் இந்திய இடதுசாரிகள்தான் அவரது நினைவைப் போற்றி வருகின்றனர்.

மூன்று அம்சங்கள் இதில் நம் கவனத்திற்குரியன.

1.இந்த நூல் மிக்க ஆழமாகவும், மாணவர்களுக்குத் தக எளிமையாகவும் எழுதப்பட்ட ஒன்று. நமது சுதந்திரப் போராட்டம் என்பது ஏதோ காந்தி மற்றும் இந்தியத் தேசிய காங்கிரசால் மட்டும் போராடிப் பெற்றதல்ல, காங்கிரஸ் போராடியது. இடதுசாரிகள் போராடினர், தொழிலாளிகள், விவசாயிகள்,. படைவீரர்கள் போராடினர், ஏன் அன்னிபெசன்ட் போன்ற ஆங்கிலேயர்களும் கூட அதில் பங்களித்துள்ளனர்.

 எல்லாவற்றிற்கும் மேலாக முஸ்லிம்கள் மற்றும் முஸ்லிம் மன்னர்களின் பங்கு மிக முக்கியமானது.

2, இப்படிப் பலதரப்பினரும் பங்குபெற்ற இந்திய சுதந்திரப் போரில் யாரேனும் ஒரு தரப்பு பங்குபெறவில்லை என்றால் அது இன்று ஆட்சியில் இருப்பவர்களின் அன்றைய அமைப்பினர்தான். ஆம் இந்துத்துவவாதிகள்தான்.
எனவே இந்திய சுதந்திரப் போராட்ட வரலாறே இவர்களுக்குக் கசப்பான ஒன்று. ஏதேனும் இந்த வரலாற்றில் அவர்களுக்குப் பங்கு உண்டென்றால் அது காட்டிக் கொடுத்தது, மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்தது இப்படித்தான் அமைகிறது. பிபன் சந்திராவின் நூல் உண்மைகளை அப்படியே சொல்வதால் இந்த நூலில் அவர்களுக்கு இடமில்லை. அவர்களால் வெறுக்கப்படும் காந்தி, நேரு, முஸ்லிம்கள், ஏன் சில ஆங்கிலேயர்கள் ஆகியோரே அதில் முக்கிய பங்கு பெறுகின்றனர். இதை இன்றைய ஆட்சியாளர்களால் சகிக்க இயலவில்லை.

3. இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் அவர்களுக்கு இடமில்லை என்பது மட்டுமல்ல, பாபர் மசூதிப் போராட்டத்திற்கு முன்னதாக அவர்கள் எந்த வெகுஜனப் போராட்டத்தையும் நடத்தியதில்லை.

4. இந்நிலையில் சுதந்திரப் போராட்டத்தில் பங்குபெற்ற சிலரை இன்று தம் வசமுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி அவர்கள் கையகப்படுத்த முயல்கின்றனர். அந்த வகையில் அவர்கள் இப்போது வல்லபாய் படேல், அண்ணல் அம்பேத்கர், சுபாஷ் சந்திர போஸ், சந்திரசேகர ஆசாத் ஆகியோரைக் கையில் எடுப்பதோடு அவர்களால் வெறுக்கப்படும் காந்தி, நேரு, முஸ்லிம் தலைவர்கள் ஆகியோருக்கு எதிராக அவர்களை மிகத் தந்திரமாக நிறுத்தவும் செய்கின்றனர்.

அந்த வகையில்தான் அவர்களுக்குப் புரட்சியாளர் பகத்சிங் மீது அந்தத் திடீர்க்கரிசனம்.. மறைந்த அறிஞர் பிபன் சந்திரா மீது திடீர் வெறுப்பு..

சரி. பகத்சிங்கை Terrorist எனச் சொல்வது சரிதானா?

இதுவும் மிகவும் நுணுக்கமாகப் பரிசீலிக்க வேண்டிய ஒன்று. இந்நூல் எழுதப்பட்டு கால் நூற்றாண்டுக்கு மேலாகிறது. சொற்களின் பொருள்கள் காலந்தோறும் மாறி வருகிறது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
வரலாற்று அனுபவங்கள் சொற்களின் பொருள்களில் புதிய பரிமாணங்களைத் திணித்துக் கொண்டே கொண்டே இருக்கின்றன. அந்தவகையில் "பயங்கரவாதம்" எனும் சொல்லின் பொருளும், அதன் உள்ளடக்கமும் இப்போது பேரளவில் மாறியுள்ளது.

1857 ல் ஆங்கிலேய அரசுக்கு எதிராக நிகழ்ந்த ஆயுத எழுச்சி அப்போது ஆங்கிலேயரால் மட்டுமல்ல நம்மாலும், நம் வரலாற்று ஆசிரியர்களாலும் அது 'சிப்பாய் கலகம்' (Sepoy Mutiny) என்றே அழைக்கப்பட்டு வந்தது. பல காலம் இது நீடித்தது. எனினும் இப்போது நாம் அப்படிச் சொல்வதில்லை. "முதல் சுதந்திரப் போர்" என்கிறோம். அதன் உள்ளடக்கம் குறித்தும் கூட இப்போது கருத்து மாற்றம் வந்துள்ளது. மன்னர்களும் உயர்சாதிப் படை வீரர்களும் நடத்திய போராட்டம் என்பதைத் தாண்டி இப்போது தலித்கள், ஆடல் மகளிர், அடித்தள மக்கள் ஆகியோரின் பங்கு முதன்மைப்படுத்தப் படுகிறது.
சோவியத்தின் வீழ்ச்சிக்குப் பின் இங்கு 'பயங்கரவாதம்' என்பதன் பொருள் மிகப் பெரிய அளவில் மாறியுள்ளது.
இன்றைய பொருளில் அந்தச் சொல் அதற்கு முன் பயன்படுத்தப் பட்டதில்லை என்பதை நாம் மனம் கொள்ள வேண்டும்.

சுதந்திரப் போராட்ட வரலாற்றில் இரு கட்டங்களில் வன்முறை என்பது ஒரு போராட்ட வடிவமாக இருந்தது, இக்கால கட்டங்களில் கொடுமை செய்த ஆங்கிலேய அதிகாரிகளைக் கொல்வது என்கிற வடிவில் கொலைகள் மேற்கொள்ளப்பட்டன.

1. 1908 -18 காலகட்டம் இவ்வகையில் முதலாவதாக அமைகிறது.. பிரஃபுல்லா சாகி, குதிராம் போஸ், மதன்லால் திங்ரா, சசின் சன்யால், ராஷ் பிஹாரி போஸ், வாஞ்சி நாதன் முதலானோரை இப்படிச் சொல்லலாம்.
இக்காலகட்டத்தில் 186 பேர் இக்குற்றங்களுக்காகத் தூக்கிலிடப்பட்டனர் என்பதை பிபன் சந்திராவின் இந்த நூல் பதிவு செய்கிறது.


2. போராட்டக் களத்திற்குக் காந்தி வந்தபின் அவர் முன்வைத்த அகிம்சை எனும் கோட்பாட்டின் ஊடாக நம் விடுதலைப் போராட்டம் பெருந்திரள் மக்கள் போராட்டமாக மாறியது.3.எனினும் 1922 ல் காந்தி தன் புகழ் பெற்ற ஒத்துழையாமைப் போராட்டத்தைத் திடீரென முடித்துக் கொண்ட போது இதனால் வெறுப்புற்ற இளைஞர்கள் மீண்டும் ஆயுதங்களை ஏந்தினர். ருஷ்யப் புரட்சியும் (1917) இத்தகைய முடிவுக்கு அவர்கள் நகர்ந்ததில் முக்கிய பங்கு வகித்தது.

1925 ல் ராம்பிரசாத் பிஸ்மில், அஷ்ஃபகுல்லா கான், சந்திரசேகர் ஆசாத் முதலானோர் பணம் ஏற்றி வந்த ஒரு ரயிலை ஆயுதங்கள் வாங்குவதற்கென கக்கொரி என்னும் இடத்தில் கொள்ளையிட்டனர். 1928ல் பகத்சிங், ஆசாத், ராஜகுரு ஆகியோர் ஆங்கில போலிஸ் அதிகாரி சான்டர்சைக் கொன்றனர். 1929ல் பகத்சிங்கும் பாதுகேஷ்வர் தத்தும் மத்திய சட்டமன்றத்தில் குண்டு வீசினர். 1930ல் சூர்யா சென்னும் அவரது தோழர்களும் சிட்டகாங்கில் ஒரு ஆயுதக் கிடங்கைத் தாக்கினர். முதற்கட்டப் போராளிகள் கையில் கீதையுடன் தூக்கு மேடை ஏறினர் என்றால் இவர்கள் அனைவரும் "இன்குலாப் ஜிந்தாபாத்" எனும் முழக்கத்தோடு கயிற்றை முத்தமிட்டனர்.

இவை எல்லாமும் பிபன் சந்திராவின் நூலில் புரட்சிகர நடவடிக்கைகளாகவே முன்வைக்கப்படுகின்றன. நமது விடுதலைப் போராட்டத்தில் இவற்றுக்குரிய பங்கு அதில் சரியாக அளிக்கப்படுகிறது. "1931 மார்ச்சில் அவர் தூக்கிலிடப்பட்டப்போது நாடெங்கிலும் 'பகத்சிங்' என்பது வீடுகள்தோறும் உச்சரிக்கும் ஒரு பெயரானது. அவர் தூக்கிலிடப்பட்ட செய்தி அறிந்து நாடு முழுவதும் ஏராளமானோர் கண்ணீர் சிந்தினர். உணவருந்தவும், பள்ளி செல்லவும், தினசரி வேலைகளைச் செய்யவும் மறந்தனர்.." என்கிறார் சந்திரா.
இதில் கவனத்தில் கொள்ள வேண்டியது அன்று இந்த நடவடிக்கைகள் அனைத்தும் 'பயங்கரவாதம்' என்றே அழைக்கப்பட்டன என்பதுதான். பகத்சிங் உட்பட அவற்றை மேற்கொண்டவர்களேகூடத் தம் நடவடிக்கைகளை அப்படித்தான் குறிப்பிட்டனர்

கட்டுரையாளர் அ.மார்க்ஸ் (A.Marx)

Comments

Leave a Comment