‘நெஞ்சத்தைக் கிள்ளிய’ திரையரங்கின் முடிவுரை!

1004 பேர் அமரக்கூடிய பிரம்மாண்ட அகஸ்தியா

வடசென்னையின் பொழுதுபோக்கு அடையாளங்களில் ஒன்று தண்டையார்பேட்டையில் இருக்கும் அகஸ்தியா திரையரங்கம். 1967-ல் திறக்கப்பட்ட இந்தத் திரையரங்கில் எம்ஜிஆர் - சிவாஜி கணேசன் படங்கள், ரஜினிகாந்தின் முதல் படமான 'அபூர்வ ராகங்கள்' ஆரம்பித்து  இன்றைய விஜய், அஜித், சிவகார்த்திகேயன் படங்கள் வரை வெளியாகியிருக்கின்றன.  கொரோனா நெருக்கடியால் திரையரங்குகள் மூடப்பட வேண்டும் என்று அரசு உத்தரவிட்டதன் காரணமாக கடந்த சில மாதங்கள் தமிழகம் முழுவதும் மூடப்பட்ட 1050 திரையரங்குகளில் அகஸ்தியா போன்ற ‘சிங்கிள் ஸ்கிரீன்’திரையரங்குகள் பெரும் நெருக்கடியைச் சந்தித்தன. அதனால், திரையரங்கு திறந்தாலும் மீண்டும் செயல்பட முடியாத நெருக்கடியில் அகஸ்தியாவை திறக்கப்போவதில்லை என்று அறிவித்துவிட்டார் இதன் நிர்வாகி நடராஜன்.
 
சினிமா தயாரிப்பிலும் இறங்கிய திரையரங்க உரிமையாளர்

சினிமாஸ்கோப் 70 எம் எம் திரையரங்கான அகஸ்தியாவில் ஒரேநேரத்தில் 1004 பேர் உட்கார்ந்து படம் பார்க்கலாம். வட சென்னைவாசிகள் மத்தியில் மிகப் பிரபலமான இந்தத் திரையரங்கம் உழைக்கும் வர்க்கத்துக்கும், குடும்பமாக வரும் ரசிகர்களுக்கும் பிடித்தமான சினிமா கோயிலாக இருந்தது. நடராஜனின் மாமா கே.நஞ்சப்ப செட்டியாரின் யோசனையால் இந்தத் திரையரங்கம் தொடங்கப்பட்டது. சேலத்தில் வழக்கறிஞராக இருந்த அவர் பொறியியலிலும் ஈடுபாடு கொண்டிருந்தார். நூல் வியாபாரம் செய்து கொண்டிருந்த அவர்கள் குடும்பம் டிஎன்கே குழுமத்தை ஆரம்பித்தது. இது ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் மற்றும் உலோக வியாபாரத்துக்கான நிறுவனம். மேலும் தேவி பிலிம்ஸ் என்கிற பெயரில் திரைப்படத் தயாரிப்பும் செய்தார்கள். தமிழில் முதல் டெக்னிகலர் திரைப்படம் என்ற பெருமையைப் பெற்ற ஜெமினி கணேசன் நடிப்பில் வந்த 'கொஞ்சும் சலங்கை' திரைப்படத்தைத் தயாரித்தது இவர்கள்தான். மேலும் இயக்குநர் பாலுமகேந்திராவின் 'அழியாத கோலங்கள்', நடிகை சுஹாசினி அறிமுகமான இயக்குநர் மகேந்திரனின் 'நெஞ்சத்தைக் கிள்ளாதே' ஆகிய படங்களையும் தயாரித்தனர்.

"திரைப்படத் தயாரிப்பு மற்றும் விநியோகத்தில் இருந்ததால், திரையரங்கம் ஆரம்பிக்கலாம் என்று நினைத்தோம்" என நினைவுகூர்கிறார் நடராஜன். இதன் விளைவாக திருவொற்றியூர் நெடுஞ்சாலையில், 1967-ம் வருடம் அகஸ்தியா திரையரங்கம் கட்டப்பட்டது. அந்த நிலம் இவர்கள் குடும்பத்துக்குச் சொந்தமானது. சில வருடங்கள் கழித்து இவர்கள் குடும்பம் அண்ணாசாலையில் இன்னொரு பிரம்மாண்ட திரையரங்கைக் கட்டினார்கள். அதுதான் தேவி சினிப்ளக்ஸ். இந்த அரங்கம் கட்டப்பட்டு 50 ஆண்டுகள் கண்டிருக்கிறது. அது இன்றைக்கும் அண்ணாசாலையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக ஆகிவிட்டது.

கேபியின் படத்துடன் கோலாகலத் தொடக்கம்

அகஸ்தியா திரையரங்கம், 1967-ம் ஆண்டு, கே.பாலசந்தரின் 'பாமா விஜயம்' திரைப்பட வெளியீட்டோடு, ரசிகர்கள் கொண்டாட்டத்துக்கு மத்தியில் திறக்கப்பட்டது. தொடர்ந்து பல்வேறு திரைப்படங்கள் வெளியாகின. இதில் எம்.ஜி.ஆரின் 'காவல்காரன்' திரைப்படத்துக்குத் தனிச் சிறப்புண்டு. எம்.ஆர்.ராதாவால்  எம்.ஜி.ஆர் சுடப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்துக்குப் பிறகு அவர் புத்துயிர் பெற்று நடித்த படம். நிறைய எதிர்பார்ப்புகள் இருந்தன. அகஸ்தியாவில் 100 நாட்கள் ஓடிய முதல் திரைப்படம் காவல்காரன்'தான். தொண்ணூறுகளிலும், 2000-களிலும் கூட அகஸ்தியா திரையரங்கில் அரங்கு நிறைந்த காட்சிகள் ஓடின. திரையரங்குகள் முதல் இரண்டு வாரங்களுக்கு, டிக்கெட் கட்டணத்தை அவர்களே நிர்ணயித்துக் கொள்ளலாம் என ஜெயலலிதா தலைமையிலான அரசு அறிவிக்கப்பட்ட அந்தக் காலகட்டமே, தங்கள் திரையரங்கின் பொற்காலம்” என்கிறார் நடராஜன். அப்போது நல்லவேளையாக நிறைய நல்ல திரைப்படங்களும் வந்ததாகக் கூறுகிறார்.

தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப காலம்தோறும் இந்தத் திரையரங்கம் மாறிக்கொண்டே வந்துள்ளது. டால்பி டிஜிட்டல் ஒலி அமைப்பு, டிஜிட்டல் ஒளி அமைப்பு ஆகியவற்றை நிறுவினார்கள். ஆனால் ஏசி இல்லாத திரையரங்கம் என்பதால் அதனால் பெரிய தாக்கம் ஏற்படவில்லை. ஒரு கட்டத்தில் ஏசி நிறுவலாம் என்றும் யோசித்திருக்கிறார்கள். ஆனால் அதற்குத் திரையரங்கின் கூரை உயரத்தைக் குறைக்க வேண்டும், அதனால் அற்புதமான பெரிய திரையின் அழகு கெடும் என்பதால் அந்த எண்ணத்தைக் கைவிட்டுவிட்டனர். அகஸ்தியா திரையரங்கம், கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் நல்லபடியாக இயங்கியுள்ளது. ஆனால் அதன் எதிர்காலம் இன்னும் தெளிவில்லாத நிலையிலேயே இருக்கிறது. இன்னொரு சுவாரசியம், கடைசியாக இங்குத் திரையிடப்பட்ட திரைப்படமும் எம்ஜிஆர் நடிப்பில் வந்த 'ரகசிய போலீஸ் 115'. இத்தனை சிறப்புகளைக் கொண்ட இத்தனை பெரிய திரையரங்கில் வெறும் 30, 40 பார்வையாளர்களே வருவதால் நிரந்தரமாக மூட வேண்டிய கட்டாயத்துக்கு வந்துவிட்டார் நடராஜன்.  “லட்சக்கணக்கான மக்களை இத்தனை ஆண்டுகளில் சிரிக்கவும் அழவும் சிந்திக்கவும் வைத்திருக்கிறது இந்த அகஸ்தியா. இப்போது அதை நிரந்தரமாக மூடும் முடிவு தவிர்க்க முடியாததாக ஆகிவிட்டது” என அவர் கூறியபோது அவரது கண்கள் கலங்கிவிட்டன.

- வேட்டையாடி



Comments