இப்படியும் ஒரு பெண் போலீஸ்!

பெருந்தொற்றின் இருண்ட காலங்களில், ஈரமுள்ள நெஞ்சமுடையவர்கள் சற்று அதிகமாகவெ இருக்கிறார்கள் என்பதற்கு திருவண்ணாமலையில் நடந்திருக்கும் இந்தச் சம்பவம் ஒரு உதாரணம். மனிதகுலத்தின் மீதான நமது கூட்டு நம்பிக்கையை மீட்டெடுக்கும் அந்த ஈர நெஞ்சத்தவரில் காவல் ஆய்வாளர் எம்.அல்லிராணி, ஆட்டோ ஓட்டுநர் கமல் ஆகியோர் அடங்குவர்.

35 வயதான ஒரு நபர் வயலில் இறந்து கிடந்ததைக் கண்டதும், அவரது குடும்பத்தினர் கூட அவரது உடலை நெருங்க பயந்தனர். அவருக்கு கோவிட் இருக்கக்கூடும் என்ற அச்சத்தில் அவரைத் தொட மறுத்தபோது, ​​இந்த இருவரும் அந்த நபரின் உடலை தொட்டுத் தூக்கி ஆட்டோவில் ஏற்றி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமையான நேற்று நடந்தது. செவித்திறன் குறைபாடுள்ள அம்மாவாசை வந்தவாசியைச் சேர்ந்தவர். இவர் எஸ். நாவல்பாக்கம் என்ற ஊருக்கு விவசாய வேலைக்காக வந்திருக்கிறார். வந்த இடத்தில். கரும்பு வயலைச் சுற்றி அமைக்கப்பட்டிருந்த மின் வேலியைத் தொட்டதால் ஏற்பட்ட மின் தாக்கத்தில் சிறிது தூரம் வந்து வயல் வரப்பில் விழுந்து  இறந்துள்ளதாகத் தெரிகிறது. வயலின் உரிமையாளர் தனது பயிரை காட்டுப்பன்றிகளிடமிருந்து பாதுகாக்க சட்டவிரோதமாக மின் வேலி அமைத்திருக்கிறார். இந்த இறப்பை கோவிட் தொற்றால் அமாவாசை இறந்திருக்கலாம் என உறவினர்கள் தவறாக எண்ணிக்கொண்டதால் அவரது உடலைத் தொட்டுத்தூக்க ரத்த உரவுகளே அருகில் நெருங்க பயந்து உடலை அங்கேயே விட்டுவிட்டனர். இச்செய்தி, தெல்லார் நிலையக் காவல் ஆய்வாளர் எம்.அல்லிராணிக்கு தெரியவர உடனே எஸ்.நாவல்பாக்கத்தில் உடல் கிடந்த இடத்துக்கு ஆட்டோ ஓட்டுநர் கமல் உதவியுடன் வந்துள்ளார்.  ​​உடலைச் சுற்றி ஒரு கூட்டம் கூடியிருப்பதைக் கண்டார். அந்த மனிதனின் தாயும் சகோதரியும் அழுது கொண்டிருந்தார்கள். ஆனால், உடல் அருகே வந்து இறந்தவரை தூக்கி உதவி செய்ய யாரும் வர முன்வர மறுத்துவிட்டனர். இதனால், அல்லிராணி உடனடியாக களத்தில் இறங்கினார், உடலை ஆட்டோ ஓட்டுநருடன் தொட்டுத் தூக்கி எடுத்து ஆட்டோ மூலம் அரசு பொதுமருத்துவமனையில் சேர்த்துள்ளார்.

இதையறிந்த திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் காவல் ஆய்வாளர் அல்லிராணியை  பாராட்டி மகிழ்ந்தார். அவருக்கு பாராட்டு பத்திரம் தந்து மேடை மீது அவரை ஏற்றி தான் கீழே நின்று சல்யூட் செய்து அவர்களை பாராட்டி ஊக்குவித்தார்.


மேடையில் நிற்க வைத்து கீழே நின்று கலெக்டர் வணக்கம் செய்கிறார்

Comments