நயன்தாராவை சூப்பர் ஸ்டார் ஆக்கிய பத்திரிகை நிருபர்!

நயன்தாரா, மிகவும் தாராள மனமுள்ளவர். தனக்குத் தேவைகள் இருந்தாலும், படப்பிடிப்பில், தன் எதிரில் நிற்கும் சாதாரண சினிமா ஊழியர் கொஞ்சம் முகம் வாடியிருந்தாலும், அவரது முக வாட்டத்தைப் போக்கும் விதமாக, ஒரு கவரை எடுத்து, அதில் ஐயாயிரம் அல்லது பத்தாயிரத்தைப் போட்டு அவர் கையில் கொடுத்துவிட்டு, ‘எந்த உதவியா இருந்தாலும் தயங்காமக் கேளுங்க' என்று சொல்லுகிறவர். தான் கதாநாயகியாக நடிக்கும் படங்களின் படக்குழுவைச் சேர்ந்த சினிமா தொழிலாளர்களைப் பற்றியும் துணை நடிகர்களைப் பற்றியும் தனது மேனேஜர் மூலம் சம்மந்தப்பட்ட தொழிலாளரின் வீட்டுக்கே சென்று அவர்களது உண்மையான நிலையைத் தெரிந்துகொண்டு வரச் சொல்லுவார். அப்படி அறிந்து வந்த தொழிலாளியின் குடும்பத்தில் படித்துக்கொண்டிருக்கும் பிள்ளைகளின் கல்விக் கட்டணத்தை,  காசோலை வடிவில், படப்பிடிப்பு இடைவேளையில் அந்தத் தொழிலாளியை அழைத்துக் கொடுத்துவிடுவார்.

அதேநேரம், தன்னிடம் பணம் பிடுங்க நினைப்பவர்களுக்கு சல்லிக் காசும் கொடுக்காமல் அவர்களை எதிர்த்துப் போராடுவார். தமிழகத்தின் நம்பர் ஒன் தினசரிப் பத்திரிகை அது. அதில் ஒரு சினிமா செய்தி வருகிறது என்றால், அந்தப் பேப்பரை டீக்கடைகளிலும் சலூன் கடைகளிலும் படிக்கும் சாமானிய மக்கள் அப்படியே நம்பிவிடுவார்கள். நயன்தாரா நடிக்க வந்த புதிதில், அவர் தமிழில் அறிமுகமான ‘ஐயா' படம் மிகச்சுமாரான வெற்றியையே பெற்றது. ஆனால், நயன்தாராவின் வசீகரத்தை உணர்ந்து கொண்ட கமர்ஷியல் இயக்குநர் பி.வாசு, அவரை ‘சந்திரமுகி'யில் ரஜினியின் ஜோடி ஆக்கினார். இரண்டாவது படமே ரஜினியுடன் ஜோடி என்றதும், அந்த நம்பர் ஒன் நாளிதழின் மூத்த நிருபர் நயன்தாராவைச் சந்தித்துப் பேட்டி எடுத்தார். ஆனால், நயன்தாரா பேட்டி என்ற பெயரில், அவர் சொல்லாதவற்றையும் நிருபர் கற்பனையாக எழுதினார். சினிமா செய்தி சேகரிப்பில் நேர்மையும் துணிவும் கொண்ட, 30 ஆண்டுகளைக் கடந்து சினிமா செய்தித் துறையில் சிறந்துவிளங்கும் நூற்றுக் கணக்கான பத்திரிகையாளர்கள் இருக்கிறார்கள். அதேநேரம் நயன்தாரா சொல்லாததையும் தனது பத்திரிகையின் பரபரப்புக்காகவும் தனது வேலையைத் தக்க வைத்துகொள்ளவும் இப்படிச் சொல்லாததை எழுதும் ஒரு சில நிருபர்கள் இருக்கவே செய்கிறார்கள். நம்பிக்கையான தனது மேக்-அப் மேன் மூலம் தாம் சொல்லாததை எழுதிய அந்த நிருபரை அதன்பின் தவிர்க்கத் தொடங்கினார் நயன்தாரா.

இது, பெரிய நடிகர்களே பார்த்து நடுங்கும் அந்த கொம்பு முளைத்த நிருபரைப் பெரிதும் சீண்டிவிட்டது. தன்னை இதுவரை யாருமே எதிர்த்ததில்லை; ஆனால், தமிழுக்கு வந்து மூன்று படங்களில் மட்டுமே நடித்திருக்கும் நிலையில் உனக்கு இவ்வளவு கர்வமா, உன்னை ஃபீல்டை விட்டே காலி செய்து அனுப்புகிறேன் பார் எனப் பொங்கி எழுந்தார் நிருபர். ஆனால், ரஜினி படத்துக்குப் பின் சூர்யா, விஜய் என பெரிய நடிகர்களின் கதாநாயகியாக எடுத்த எடுப்பிலேயே டாப் கியரில் எகிற ஆரம்பித்தது நயன்தாராவின் மார்க்கெட் நிலவரம்.

நினைத்தது ஒன்றும் நடப்பது ஒன்றாகவும் இருக்கிறதே எனக் கொதித்துப்போனார் நிருபர். தனது கோபத்தைக் காட்ட, நயன்தாரா ‘கள்வனின் காதலி’ படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோது ‘எஸ்.ஜே.சூர்யாவுக்கும் நயன்தாராவுக்கும் காதல்’ என்று கிளப்பிவிட்டார். இதுதான் நயன்தாரா பற்றி எழுதப்பட்ட முதல் கிசுகிசு. அது எடுபடாமல் போகவே, இனி, நயன்தாராவின் உண்மையான் அந்தரங்கத்தை மட்டுமே கண்டுபிடித்து எழுதவேண்டும் கங்கணம் கட்டிக்கொண்ட அந்த நிருபர், வல்லவன் படப்பிடிப்பில் நயன்தாராவுக்கும் சிம்புவுக்கும் உண்மையாகவே காதல் நெருப்பு பற்றிக்கொண்டதை படக்குழு வழியாக மோப்பம் பிடித்து தெரிந்துகொண்டு, உடனடியாக அதை எழுத ஆரம்பித்துவிட்டார். மிகவும் புத்திசாலித்தனமாக இந்தச் செய்தியை அந்த நாளிதழ் நிருபருக்குச் சொன்னதே சிம்புதான் என நயன்தாரா காதுக்கு செய்தியைக் கொண்டு சென்று சிண்டு முடிந்துவிட, சிம்புவுக்கும் நயன்தாராவுக்கும் பெரும் சண்டை மூண்டது.

சண்டை பிரேக் அப் ஆக முடிந்தது. விளைவு; சிம்பு நயன்தாராவுடன் நெருக்கமாக இருந்த படங்கள் இணையத்தில் யாராலோ வெளியிடப்பட்டு பெரும் பரபரப்பாகியது. முன்பின் யோசிக்காத சிம்புதான் அதைச் செய்தார் என்று கூறப்பட்டது. படங்கள் வெளியான விவகாரத்தில் இதுவரை உண்மை வெளிவராத நிலைதான் என்றாலும் அப்போது அந்த நிருபர் தனக்கு வெற்றி கிடைத்துவிட்டதாக பலருக்கும் பார்ட்டி கொடுத்து கொண்டாடினார்.

ஆனால், அடுத்தடுத்து நடந்தது தான் அந்த நிருபரை வாழ்க்கையையே வெறுக்கும்படிச் செய்துவிட்டன. வல்லவன் சர்ச்சைக்குப்பின் நயன்தாரா, தமிழ் வெகுஜன ஊடகங்களின் பொழுதுபோக்குச் செய்தி விற்பனைக்கு பெரும் ஊக்கியாக மாறிப்போனார். ஊடகங்கள் அவரைக் குறித்து அவதூறு எழுதாமல், அவரது அழகிய படங்களையும் அவரைக் குறித்து சுவாரசியமான செய்திகளையும் வெளியிடத் தொடங்கின. நயன் தாராவை அழிக்க நினைத்த அந்த ஒரு பத்திரிகையில் மட்டும் நயன் தாராவுக்கு எதிரான ஊகச் செய்திகள் வெளிவர, மற்ற ஊடகங்கள் நயன் தாராவைக் கொண்டாட, வெறுத்துப் போனார் அந்த நிருபர். போதாக்குறைக்கு நயன்தாராவின் வசீகரம், அவரைத் தெலுங்கு, தமிழ், மலையாளம் ஆகிய மூன்று மொழிகளிலும் முன்னணிக் கதாநாயகர்களின் ஜோடியாக வலம் வரச் செய்தது. கதை பிடித்தால் மட்டும் சின்ன ஹீரோக்களுக்கும் அவ்வப்போது ஜோடியாக நடித்து, கோடம்பாக்கத்தின் ‘செல்ல டார்லிங்’ என்று பெயர் வாங்கினார். அதன்பின் உண்மையாகவே பிரபுதேவாவுடன் காதலாகி பிரேக்-அப் ஆனாலும் நயன்தாராவின் நேர்மையான அணுகுமுறையால் இப்போது நயன்தாரா தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர். உளப்பூர்வமாக, திறமைகளின் மொத்த உருவமாக இருக்கும் இயக்குநர் விக்னேஷ் சிவனைக் காதலித்து வரும் அவர் வெகுவிரைவில் திருமண பந்தத்தில் இணைய இருக்கிறார்கள்.

இப்போது விடாக்கொண்டர் நிருபர் சோர்ந்துபோய் பணியிலிருந்தும் மாறி வெறொரு பத்திரிகைக்குப்போய், அங்கே அடக்கிவாசித்துவருகிறார். உண்மையில், அந்த ஏடாகூட நிருபர் அப்படி நயன் தாராவைத் துரத்தி துரத்தி கிசுகிசுக்களை எழுதிக் குவித்ததும் கூட நயன்தாரா ஊடகங்களின் பேசுபொருளாக இருப்பதற்கு ஒரு காரணம் என்றால் அது மிகையில்லை அல்லவா?

- கோடம்பாக்கத்திலிருந்து வேட்டையாடி (நினைவில் காடுள்ள நேய மிருகம்)    

Comments

Leave a Comment