எஸ்.பி.பியை அழைத்துச் செல்லவந்த கடவுள்!

ராஜவும் எஸ்.பி.பியும்

சென்னையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் தன் உடலில் பல இடங்களில் பலதரப்பட்ட கருவிகள் பொருத்தப்பட்டு உறக்கத்தில் இருந்தார் எஸ்பிபி. திடீரென்று முழிப்புத் தட்டியது. தன்னைப் பற்றியும் தற்போதைய நிலைமையைப் பற்றியும் உடனே தெளிவடைந்தார். அந்த சமயத்தில் அவரெதிரே மிகுந்த பிரகாசமான ஓர் உருவம் தோன்றியது.
 வந்திருப்பது அந்த இறைவனே என்பதை அறிந்தார். கை கூப்பினார். ஒரு சில நிமிடங்கள் அமைதியாகக் கரைந்தன.

“மகனே என்னிடம் ஏதாவது பேசத் தோன்றவில்லையா உனக்கு?”

இல்லை என்று தலையசைத்தார் எஸ்பிபி. 

“எனக்கு ஏன் இந்த நிலைமை என்று கேட்பாயோ?” 

இல்லை என்று மீண்டும் தலையசைத்தார். 

“எனக்கு மட்டும் இந்த அளவு குரல்வளம் தந்தாய். கோடிக்கணக்கான ரசிகர்களைத் தந்தாய். பலபேரின் வாழ்க்கையில் மாற்றத்தை உணரவைக்கும் திறமையைத் தந்தாய். இதெல்லாம் எனக்கு மட்டும் ஏன் என்று நான் கேட்டேனா? அதுபோலத்தான் இதையும் நான் ஏற்றுக் கொண்டிருக்கிறேன். ஏதோ என் வினைப்பயன் கழிந்து கொண்டிருப்பதாக நினைத்துக் கொள்கிறேன்”

இறைவன் முகத்தில் புன்னகை. 

“உன்னை ஏன் எல்லோருக்கும் பிடித்திருக்கிறது தெரியுமா?”

“என் பாடல்கள். அதனை அவ்வளவு அருமையாக வடிவமைத்துக் கொடுத்த இசையமைப்பாளர்களுக்கும் பாடலாசிரியர்களுக்கும் மிக்க நன்றி”

“பாடல்கள் மட்டுமா?” 

வேறு என்ன என்பதுபோல் பார்த்தார் எஸ்பிபி.

“நீ உண்மையான மனிதத்துவம் அறிந்த மனிதன். எந்த ஒரு சிறிய ஆத்மாவையும் மதிப்பவன்” 

இரு கைகளையும் கூப்பினார் பாலு. 

“புகழின் உச்சியை அடைந்தாலும் அது உன் தலைக்கேறாது பார்த்துக்கொண்டாய். உன் நெருங்கிய நண்பன் உன்னைக் காயப்படுத்திய போதும், அடுத்த மேடையிலேயே அவனைப் போற்றியவன் நீ. பெரியவர்களை மதிப்பதிலும் இளையவர்களை ஊக்குவிப்பதிலும் உனக்கு நிகரில்லை” 

மீண்டும் இரு கைகளையும் கூப்பினார் பாலு. 

“அதனால்தான் எல்லோரும் தங்களில் உன்னைப் பார்க்கிறார்கள் உன்னில் தங்களைப் பார்க்கிறார்கள்” 

“போதும் பெருமானே. இதுவெல்லாம் நீ கொடுத்ததன்றோ?”

“அப்படிச் சொல்லிவிட முடியாது, நீ வளர்த்துக் கொண்டது. பலபேர் பாலுவைப்போல் ஆகவேண்டும் என்று கனவு காண்கிறார்கள். எல்லோரும் உன்னைப்போல் பாடி விட முடியுமா என்ன? ஆனால் எல்லோரும் உன் மனித குணங்களைப் பேண முடியும்” 

“அந்த வகையில் என் ரசிகர்கள் மனதில் நான் ஒரு சிறு மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கிறேன் என்றால் எனக்கு மகிழ்ச்சியே. ஐயனே, இன்று நீங்கள் வந்திருக்கும் நோக்கம்?” 

“உன் முடிவைத் தீர்மானிக்கும் அதிகாரத்தை உனக்கு அளிக்கவே இங்கு வந்திருக்கிறேன்”

“புரியவில்லையே…” 

“இப்பொழுது உன் உடலும் மனமும் எப்படி இருக்கின்றன?” 

“மனம் அதே போல் தான். உடல்தான் சுகமில்லை. இதோ இத்தனை கருவிகள் மூலமாக என் உயிர் ஓடிக்கொண்டிருகிறது. முன்னை விடத் தேறி வருவதாக மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள்” 

இறைவன் புன்னகை மாறாமல் கேட்டுக்கொண்டிருந்தார். எஸ்பிபி தொடரட்டும் என்று காத்திருந்தார். 

“ஒரு சந்தேகம் கேட்கலாமா?” 

“கேட்பாயாக”

“என் தொண்டையில் துளையிட்டு சுவாசக்கருவி பொருத்தி இருக்கிறார்கள். நாளை நான் குணமடைந்த பின் மீண்டும் முன்புபோல் பாட இயலுமா?” 

“சில மாதங்கள் கழித்து நன்றாகப்பேச முடியும். உன் நுரையீரல் மிகவும் பாதிப்படைந்துள்ளது. முன்புபோல் பாட இயலாது என்பதுதான் உண்மை” 

இதைக் கேட்டவுடன் பாலுவின் கண்களில் தாரைதாரையாகக் கண்ணீர் வழிந்தது. அதை எதிர்பார்த்து இறைவன் அமைதி காத்து இருந்தான். 

தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்ட பாலு பின்னர் கேட்டார், “எனக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கு ஏற்பாடு செய்கிறார்கள். அது செய்து முடிந்தால் நான் பாட முடியுமா?” 

“அப்பொழுதும் சந்தேகமே. அந்த நுரையீரலைக் காப்பாற்றும் பொருட்டு நிறைய மருந்துகளை உட்கொள்ள வேண்டி வரும். சாதாரணமாக வெளியில் சென்றுவரக் கட்டுப்பாடுகள் இருக்கும்” 

“அப்படியானால் நான் முன்புபோல வானம்பாடியாக வாழ முடியாதா?”
“என்னை மன்னித்துகொள் மகனே” 

மீண்டும் பாலுவின் கண்களில் கண்ணீர். 

“முடிவு உன் கையில். இருக்க விருப்பமா, இறக்க விருப்பமா?”

“என்னால் பாட முடியாது என்றால் உயிர் வாழ்வதில் அர்த்தமில்லை. என்னை இப்பொழுதே அழைத்துக் கொள்” 

இறைவனின் முகத்தில் அதே புன்னகை. 

“நன்றாக மீண்டுமொருமுறை யோசித்துக் கொள்” 

“இதில் யோசிப்பதற்கு ஒன்றுமில்லை. நான் தயார்” 

மீண்டும் பாலுவின் கண்கள் கண்ணீர் சிந்தின.

“இப்பொழுது எதை நினைத்து அழுகிறாய் மகனே?” 

“என்னுடைய கோடிக்கணக்கான ரசிகர்கள், நான் இறந்துவிட்டேன் என்று அறிந்தால் அதிர்ச்சியடைவார்கள். அந்த வகையில் நான் அவர்களுக்குத் துன்பம் தருகிறேன். அதை நினைத்தால்….” 

“நீ  திடீரென்று அகால மரணம் அடைந்திருந்தால் பலரும் அதிர்ச்சியில் உயிர் விட்டிருப்பார்கள். அவர்கள் மனதையும் தயார் படுத்தும் பொருட்டுத்தான் கடந்த 40 நாட்களாக நாடகம் நடந்தது. முடிவை யாரும் எளிதாக ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பது உண்மை. ஆனால் ஓரளவு பக்குவப்பட்டு விட்டார்கள். உன் பூத உடல் தான் இல்லாதிருக்கும். இசையாக நீ நெஞ்சில் என்றும் நிறைந்து இருப்பாய். தமிழ் உள்ளவரை உன் புகழ் இருக்கும்”கண்ணீர் மல்க மீண்டும் கை கூப்பினார் பாலு. 

“பல்வேறு இடங்களில், பலதரப்பட்ட மனிதர்களின் முன் நான் பாடியிருக்கிறேன். இப்பொழுது உங்கள் முன் பாடும் வாய்ப்பை வேண்டுகிறேன் இறைவா”

“ஆரம்பிக்கலாம் மகனே உன் இசையை”

 கண்கள் மூடி மனம் உருகிப் பாடத் தொடங்கியது அந்தக் குயில். அதை அணைத்தவாறு, அதனை அழைத்துகொண்டு அதன் இசையில் மயங்கியவாறே பயணிக்க ஆரம்பித்தான் இறைவன். சன்னமாக வெகுநேரம் அந்தப் பாட்டு கேட்டு கொண்டேயிருந்தது. 

 ‘இந்தத் தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்…………’

கட்டுரையாளர்: டாக்டர் பி.ஆர்.ஜே.கண்ணன்

எஸ்.ஜானகி எஸ்.பி.பி இளையராஜா
கேளடி கண்மணி படத்தில்
சிவாஜி மற்றும் சங்கர் கணேஷுடன்

Comments

  • Parbriz LAND ROVER 88 109 Hardtop LR 1977

    2 years ago

    Hello, every time i used to check website posts here early in the break of day, because i enjoy to learn more and more. https://vanzari-parbrize.ro/parbrize/parbrize-land_rover.html

  • call girls in gurgaon

    2 years ago

    We consider in supplying what a customer asks for. https://callgirlsingurgaonservice.com/

Leave a Comment