மூணாறு நிலச்சரிவு: இயற்கையின் மீது பழிபோடலாமா?

நிலச்சரிவுக்கு முன் மூணாறு
கடந்த ஆகஸ்ட் 6-ம் தேதி கேரளாவின் இடுக்கி மாவட்டம் மூணாறு பஞ்சாயத்துக்கு உட்பட்ட பெட்டிமுடிப் பகுதியில் மிகப்பெரிய  நிலச்சரிவு ஏற்பட்டது. அதில் சிக்கி இதுவரை 55 பேர் உயிர் இழந்துள்ளனர். இன்னும் பலர் நிலச்சரிவினால் ஏற்பட்ட இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளனர்.
 
இத்துயர நிகழ்வை இயற்கை பேரிடர் என்று இயற்கையின் மீது மட்டும் பழிபோட்டு நாம் எளிதில் கடந்துவிட முடியாது.  காட்டுதீ , பெரும் புயல்கள், அதிதீவிர மழை, அதீத வெப்பம், பனிபாறை உருகுவது, கடல்மட்டம் கூடுவது, கொள்ளை நோய்கள் என இந்நூற்றாண்டில் நாம் எதிர்கொள்ளும் ஒவ்வொரு இயற்கை சீற்றத்திற்கும் மனித செயல்பாடுகளே அடிப்படை காரணமாக அமைகின்றன. இந்த இடுக்கி நிலச்சரிவும் அப்படியான மனித நடவடிக்கைகளால் உந்தப்பட்ட ஒரு நிகழ்வு தான் என்கின்றனர் நிலச்சரிவு குறித்து ஆராயும் நிபுணர்கள்.

ஒரு நிலச்சரிவு ஏற்படுவதற்கு பல்வேறு புவியியல் காரணங்கள் (Geological Causes), உருவவியல் காரணங்கள் (Morphological Causes), தட்பவெட்பம், நீரியல் மாற்றங்கள், நிலநடுக்கம் போன்ற புறக்காரணங்களும் (Physical Causes) இதை தவிர மனித செயல்பாடுகளும் (Human Activities) காரணிகளாக அமைகின்றன. பொதுவாகப் பனிமலைகள் உருகுவது, அதீத மழைப்பொழிவு, மணல் அரிப்பு, நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு, நிலத்தடி நீர் மட்டத்தில் ஏற்படும் மாற்றங்கள் மேலும் இவற்றோடு மனித செயல்பாடுகளாலேயே நிலச்சரிவுகள் ஏற்படுகின்றன.

இடுக்கி மாவட்டத்தில் இயற்கை அழிவு

பல  சமயங்களில் மேற்குறிப்பிட்ட ஒன்றுக்கும் மேற்பட்ட காரணங்களின் கூட்டு விளைவுகளால் கூட நிலச்சரிவுகள் ஏற்படலாம். இடுக்கி மாவட்டத்தில் கடந்த 30 ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்ற காடழிப்பினாலும், தேயிலைத் தோட்ட உருவாக்கங்களினாலும் அந்த நிலப்பகுதி தனது இயல்பான உறுதி தன்மையை இழந்துவிட்டதாக அப்பகுதியில் நிலச்சரிவை ஆராய்ந்து வரும் நிபுணர்கள் குறிப்பிடுகிறார்கள். பெரும் அளவில் மரங்கள் வெட்டப்பட்டதன் விளைவாக மணலை இறுகப்பிடிக்கும் வேர்கள் இல்லாததன் காரணமாக, ‘நிலச்சசரிவை தாங்கும்’ (Immunity towards landslide) திறனை மண் இழந்திருக்கிறது. இந்த தன்மையை இழந்த நிலப்பரப்பில்  அதிதீவிர மழைப்பொழிவு மணல் அரிப்பையும், இவ்வாறான மணல் சரிவையும் அடிக்கடி ஏற்படுத்தும் என்று எச்சரிக்கின்றனர் ஆய்வாளர்கள்.

நம்முடைய உடம்பைப் போலவே மண்ணும் ‘கூர் உணர்வுடையது’(sensitive). இயற்கையாக அமைந்த மண்ணின் தன்மையில் ஏதாவது மாற்றம் நிகழுமானால் அதன் விழைவை நாம் சந்தித்தே ஆகவேண்டும். காடழிப்பு மட்டுமல்லாமல், ஒற்றைப் பயிர்முறை (monocropping),சுரங்கப் பணிகள், அணைக் கட்டுமானங்கள், நெடுஞ்சாலைகள் என எல்லாமும் சேர்த்து மண்ணின் தன்மையை முழுவதுமாக பலவீனமாக்கிவிட்டன. மரங்கள் வெட்டப்பட்டு, அதன் வேர்கள் அப்படியே அழுகிப் போக எடுத்துக்கொள்ளும் காலகட்டத்தில் அவை குழாய்களை போல் மாறி, அந்த குழாய்களின் வழியாக அடி மண்ணுக்கு நேரடியாக மழை நீர் செல்கிறது. அப்படிச் செல்வதால் அடிமண் கசடாக மாறி கடினப்பாறைகளுக்குள் ஊடுருவி அவற்றின் உறுதித்தன்மையை நீர்த்துப் போகச் செய்துவிடுகின்றது.

இந்த பலவீனமான நிலத்தை இன்னும் அதிக பலவீனமாக்கியது சமீபத்தில் பெய்த பெரும் மழை. அப்பகுதியில் உள்ள அரசு தானியங்கி வானிலை நிலையத்தில் (Automatic Weather Station) பதிவான அளவின் படி ஆகஸ்ட் 1 முதல் 6 வரை 995மிமீ மழை பொழிவு பதிவாகியுள்ளது. நிகழ்வு நடந்த ஆகஸ்ட் 6ம் தேதி மட்டும் 616மிமீ மழை பதிவாகியுள்ளது. சராசரியாக கேரளாவின் மழை அளவு 3,000மி.மீ, இந்த அளவு மழை இரண்டு முதல் இரண்டரை மாதங்களில் பெய்யும், ஆனால் இப்போது அதன் சரிபாதி அளவு ஒன்று அல்லது இரண்டு வாரங்களில் கொட்டி தீர்த்திருக்கிறது. இது பூமியை கோடிக்கணக்கான கற்களை கொண்டு அடிப்பதற்கு சமம், கேரளாவில் பொதுவாக அறியப்படும் ‘சரடு மழை’ (yarn rain) இனிமேல் இருக்காது என்கின்றனர் ஆய்வாளர்கள்.

நாம் மட்டுமே உதாரணம் அல்ல

கடந்த 2018-ம் ஆண்டு கேரளத்தில் 300 பேரை பலிகொண்டு இயல்பு வாழ்கையைப் புரட்டிபோட்டது மழை-வெள்ளம். 2019-ம் ஆண்டும் கேரளத்திலும் அண்டை மாநிலங்களிலும் 150 வீடுகளை சின்னாபின்னமாக்கி ஆயிரக்கணக்கான மக்களை காலநிலை அகதிகளாக மாற்றி முகாம்களில் தள்ளியது பெருமழை. நிலச்சரிவு நமக்கு மட்டுமே ஏற்படவில்லை; அதற்கு நாம் மட்டுமே உதாரணம் அல்ல. இதைப்போன்ற அதிதீவிர காலநிலை நிகழ்வுகள் கேரளாவில் மட்டுமல்ல தெற்காசிய பிராந்தியம் முழுவதுமே இப்படியான தொடர் கனமழை, சூறாவளிகள், பெரும் வெள்ளம் போன்ற அதிதீவிர காலநிலை நிகழ்வுகளால் பாதிப்புக்குள்ளாகி வருகிறன.

2020 மே மாதம் முதல் அசாம் போன்ற வட கிழக்கு மாநிலங்களையும் பீகார் மாநிலத்தையும் மூழ்கடித்த வெள்ளம் 24 லட்சம் மக்களின் வாழ்கையை புரட்டிபோட்டது. தற்போது கேரளாவின் நிலையைப் போலவே சமீப காலமாக பெரும் வெள்ளத்திற்கு ஆளான நேபாள நாட்டிலும் தொடர் மழை காரணமாக கடுமையான நிலசரிவுகள் ஏற்பட்டன. பங்களாதேஷ் நாட்டின் மூன்றில் ஒரு பகுதி வெள்ளத்தால் மூழ்கியதுடன் ஐந்தில் ஒரு பங்கு மக்கள் தொகையான 16 கோடி மக்கள் பாதிக்கப்பட்டனர். நிலம் வலுவிழப்பதை காடழிப்புடனும், நிலச்சரிவைப் பெரும் மழையுடனும், பெரும் மழையைக் காலநிலை மாற்றத்துடனும் தொடர்புபடுத்திப் பார்க்க நாம் தவறினால் அடிப்படைப் பிரச்சனையே நாம் புரிந்துகொள்ள முடியாமல் போகிவிடும்.

வரலாற்றுரீதியாகப் பார்த்தால், மேற்குத் தொடர்ச்சி மலை இவ்வுலகில் உயிர்கள் தோன்றுவதற்கு முன்னரே தோன்றியவை. அவைக் கடினமான அடர்த்திமிக்க சார்னோகைட் வகைப் பாறைகளைக் கொண்டவை. தென்னிந்தியாவில் ஓடக்கூடிய அனைத்து நதிகளின் பிறப்பிடமான இந்தப் பகுதியில் உயிர் தழைத்து வாழ்வதற்கு மேற்கு மலைகளின் பங்களிப்பு பிரதானமானது. கட்டிடங்கள் கட்டுவது, தோட்டங்களை விரிவாக்கிக்கொண்டே செல்வது ஆகிய மனித நடவடிக்கைகளே மூனாறு நிலச்சரிவுக்கு முக்கிய காரணமாக இருக்க, இயற்கையின் மீது பழிபோடுவது எப்படி சரியாகும்?

நிலச்சரிவுக்குப் பின் மூணாறு

Comments

Leave a Comment