மரணம் கொண்டாடுவதற்கே!

இரு கிராமியப் பெண்களின் களங்கமற்ற உலகம்
வாழ்க்கைக்கும் சினிமாவுக்கும் ஏன் இத்தனை இடைவெளி என்று ஒரு ரசிகன் எப்போது எண்ணத் தொடங்குகிறானோ, அப்போது அவனது சினிமா ரசனை உயரத் தொடங்கிவிட்டது என்று பொருள். நாயகன் நாயகியின் கனவு தமிழ் வணிக சினிமாக்களில் கண்டம் கடந்த பாடல்களாகவும் கனவுகளில் அவர்கள் உரசிக்கொள்ளும் விரசங்களாகவும் இருப்பதைத் தாண்டி, ‘ஒரு கனவு எப்படி இருக்க வேண்டும், அல்லது இருக்கலாம்?’ என மாற்று விரும்பும் படைப்பாளி யோசிக்கும்போதுதான் மாற்றம் பிறக்கிறது. உதாரணத்துக்கு மார்க்ஸ், காந்தி, போல பெரிய மனிதர்களின் கனவாகத்தான், அவை இருக்கவேண்டும் என்பதில்லை. பசித்த மனிதர்கள் திரண்டு எழுந்து ஆயுதங்களைக் கைப்பற்றுகிற கனவாக இருக்கலாம். அதேபோல், யதார்த்தமென்பதும் அம்பானிகளின் அண்ணாமலைகளின் யதார்த்தமாகத்தான் இருக்கவேண்டிய அவசியமில்லை. அது தீண்டாமைச் சுவர்களாக, எலிக்கறி தின்னும் விவசாயிகளின் பசியாக, ஊருக்குள் கட்டும் அணு உலையாக, விளைநிலங்களில் உறிஞ்சப்படும் மீத்தேன் எரிவாயு நஞ்செனும் யதாத்தமாக இருக்கலாம்.

எல்லா கலையும் இறுதியில் விற்பனைக்கானதுதான். ஆனாலும்  காண்டம் விற்பதும், வயாக்ரா விற்பதும் ஒன்றாகாதல்லவா? ஒரு நல்ல திரைப்படம் என்பதும் யதார்த்ததில் இருந்து எழுந்தாலும் அது வாழ்க்கைவிட்டு விலகி நிற்கக் கூடாது. அத்தகைய சிறந்த படைப்புக் கொள்கையை கையாண்டிருக்கிறது ‘செத்தும் ஆயிரம் பொன்’ திரைப்படம். நெட்ஃபிளிக்ஸ் இணையதளத்தில் அதைப் பார்த்தபோது ‘என்னதான் கடல்போல் விரிந்த ஏரி என்றாலும் உள்ளூக்காரனுக்கு அது சிறிய குட்டைதான்!’ என்று எண்ணத் தோன்றியது.

கோரோனா வைரஸை கண்டு மனிதர்கள் நடுங்கி ஒளிந்துகிடக்கும் இந்தக் காலத்தில், மரணத்தை ஒரு திருவிழாபோல, கொண்டாட்டமாக மாற்றுகிற சினிமா இது. மரண வீடுகளில் ஒப்பாரி வைக்கும் வயாதன பெண்மணி,  இறந்துபோன உடல்களை துக்கம் கேட்க கூடுபவர்களின் பார்வையில் பொலிவுடன் இருக்கச் செய்ய ஒப்பனை செய்யும் ஒரு இளைஞன், சினிமா படப்பிடிப்பில் ஒப்பனை செய்வதையே முழுநேரத் தொழிலாக வரித்துக்கொண்ட ஒரு இளம் வயது பெண். இம்மூன்று கதாபாத்திரங்களை  மையமாகக் கொண்டு விரியும் வெகு இயல்பான ஆனால் சுவாரஸ்யம் குன்றாத திரைக்கதை.

துக்க வீடுகள், ஆடை, ஒப்பனை என அலங்கரிக்கப்பட்ட இறந்தவர்களின் உடல்கள், உடல்களைப் பார்த்ததுமே மூக்கை சிந்தி சுவரில் துடைத்து அழும் மூத்தோர், ஒப்பாரி பாடல்கள், என சலிப்பை ஏற்படுத்திவிடக்கூடிய ஆபத்துள்ள ஒரு கதைக்களம். மாறாக உற்சாகம் நம்மைத் தொற்றுக்கொள்கிறது. மரணத்தை யதார்த்தமாக கடந்துபோகும் சாமானிய மனிதர்களின் அழகியல் கலந்த வாழ்வியலை ஆர்ப்பாட்டம் இல்லாத சித்தரிப்பு.
 
சின்னவீடு வைத்துக்கொண்ட ஒருவன், சின்ன வீட்டுக்காரியுடன் படுக்கையில் சந்தோஷமாக இருக்கும்போதே செத்துப் போகிறான் ஒரு மைனர். இப்போது செத்துப்போனவனுக்கு இறுதி மரியாதை செய்வது கட்டிய மனைவியா, சேர்த்துக்கொண்ட சின்ன வீட்டுக்காரியா என்பதில் ரணகளமாகிப்போகிறது துக்க வீடு. ‘உங்கிட்ட சந்தோஷமா இருந்திருந்தா எதுக்காகடி எங்கிட்ட வந்திருக்கப் போறான். துப்புகெட்ட வெளக்குமாறே?’ என்று கூச்சலிடுகிறாள் சின்ன வீட்டுச் சக்களத்தி. என்னோட ஆளுமேல எவ்வளவு ஆசை வெச்சிருந்தா அவரைக் கடிச்சு வச்சிருப்பேன்.. நீங்க வேணா பாருங்க’ என்று ஊராரைப் பார்த்து பெருமிதத்துடன் ஓலமிடுகிறாள் அவள்.
திகைத்துப்போகும் ஊர்க்காரர் ஒருவர், மட்டையாகி உடலாகக் கிடக்கும் அந்த மன்மதராசாவின் சட்டை பட்டனை அவிழ்த்து பார்க்கிறார். சின்னவளின் பல் பட்ட குறி ஆழமாக அந்த உடலின் மார்பில் பதிந்திருக்கிறது. அதைப் பார்த்து, தன்னுடைய பொருள் ஒன்றை எவளோ ஒருத்தி ‘காக்கை கடி’ கடித்துவிட்டாலே என ஓவென கதறி அரற்றுகிறாள் கட்டிய மனைவி. பஞ்சாயத்துக்காரர்கள் சின்ன வீட்டுக்காரியை அங்கிருந்து அப்புறப்படுத்துகிறார்கள். ஒருவழியாக பிரச்சினை ஓய்ந்து உடலை ஈடுகாட்டுக்கு எடுத்துச் செல்ல எல்லோரு தயாராகும்போகும் கட்டியவள் மீண்டும் அடம் பிடிக்கிறாள். ‘அந்தக் காயத்தை வெளியே தெரியாதபடி ஒப்பனை செய்து மறைத்தபிறகுதான் தூக்க வேண்டுமென்கிறாள். ரகளைத் தொடர்வதில் அங்கே வந்து சேருகின்றன மற்ற கதாபாத்திரங்கள். கதையில் தொழில்முறை ஒப்பாரி பாடும் ஒரு முதிய பெண்ணுக்கும் சென்னை மாநகரில் வசிக்கும் அவளது பேத்திக்கும் இடையிலான துண்டுக்கப்பட்ட உறவை மீட்டெடுக்கும் மாநகரப் பெண்ணின் கிராமத்து நாட்கள்தான் திரைக்கதையின் முக்கிய பேசுபொருள் என்றாலும், மரணம் ஒரு திருவிழாவாக மாறுவதை படம் பார்க்கும்போது உணரமுடியும்.

சாமானிய மனிதர்களின் வெளிப்படைத் தன்மை, அவர்களது வெள்ளந்தி குணம், ஏட்டிக்குப் போட்டி, வெட்டி வீம்பு, எல்லாவற்றுக்கும் அடிநாதமாக ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் தீராத பாசமென சாமானியத் தமிழ் வாழ்வியல் படம் முழுவதும் மனம் பரப்புகிறது. ஒரு தொழில்முறை ஒப்பாரிப்  பெண், அவள், தனது உயிலை மாற்றி எழுதவேண்டும் என்பதற்காக  சென்னையில் வசிக்கும் தனது பேத்தியை தனது கிராமத்துக்கு அழைக்கிறாள். கதையின் நாயகி ஒப்பாரிப் பெண்ணா இல்லை அவளது பேத்தியா என்பதை நீங்களே கண்டறிந்துகொள்ளுங்கள், தொழில்முறை  ஒப்பாரிப் பெண்ணின் பேத்தியுடைய முறை மாமன்தான் உடல்களுக்கு ஒப்பனை செய்யும் இளைஞன். இந்த மூவரும் மூன்று துருவங்களாக மோதுகிறார்கள். ஒவ்வொரு துக்க வீடுகளாய் கடந்து, இவர்களிடையே எரியும் தீ எப்படி அணைகிறது காட்சிக் கவிதைகளாக விரித்துச் செல்கிறது படம். மரணம் என்பது அஞ்சுவதற்கு அல்ல; அது கொண்டாடுவதற்கான ஒரு தருணம், வாழ்க்கையின் கொண்டாட்டத் தருணங்களில் அதுவும் ஒன்று என்பதை மண் மணத்துடன் எடுத்துக் காட்டுகிறார் அறிமுக இயக்குநர் ஆனந்த் ரவிச்சந்திரன். சாவு வீட்டின் சோகம் சிறிதும் எட்டிப்பார்க்காமல் மெல்லிய நகைச்சுவையை ஊடுபாவாக இழையோட்டி,  சிரிக்க மட்டுமல்ல; உங்களுக்கு படிப்பினையும் உண்டு. ஆனால், அது ரசிக்கும் விதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

- நினைவில் காடுள்ள வேட்டையாடி


Comments

Leave a Comment