பால் ஏற்றிக்கொண்டு புறப்பட்டது இந்தியாவின் ‘விவசாயி ரயில்’

மஞ்சள் வண்ணத்தில் ‘விவசாயி ரயில்’
கடந்த ஒரு வாரத்துக்கு முன் இந்தியாவின் முதல் ‘விவசாயி ரயில்’  மகாராஷ்டிராவிலிருந்து பீகாருக்கு இயக்கப்பட்டது. தற்போது இரண்டாவது விவசாயி ரயிலும் பால் கலன்களை இணைத்துக்குக் கொண்டு கிளம்பியது இந்தியத் தொடர்வண்டித் துறை வரலாற்றில் முக்கியமான நிகழ்வு எனலாம்.  

விவசாயிகளின் நலன் கருதி, வேளாண் பொருட்களை மட்டும் கொண்டு செல்ல தனியாக ரயில் விடப்படும் என்று நடப்பு நிதியாண்டு பட்ஜெட் தாக்கலின்போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார். எளிதில் அழுகும் காய்கனிகள்,  பூக்கள் போன்ற வேளாண் பொருட்களை மட்டும் கொண்டு செல்ல ‘கிஷான் ரயில்’ அதாவது விவசாயி ரயில்களை இயக்க ரயில்வே முடிவு செய்தது. இதன்படி மகாராஷ்டிாவின் நாசிக் மாவட்டம், தேவ்லாலி நகரிலிருந்து கடந்த 7-ஆம் தேதி பீகார் மாநிலம் தனாபூருக்கு முதல் கிசான் ரயில் புறப்பட்டது. விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பிஹாரின் தனாபூரிலிருந்து முசாபர்பூர் வரை ரயில் நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில் இரண்டாவது விவசாயி ரயில் பீகாரின் பரூனி நகரிலிருந்து ஜார்க்கண்ட் மாநிலம் டாடா நகருக்கு நேற்று பால் ஏற்றப்பட்ட கொள்கலன்களுடன் புறப்பட்டது. பொகாரா நகரம், ஹாதியா, டாடா நகர் ஆகியவற்றுக்கு பால் விநியோகம் செய்ய இந்த ரயில் இயக்கப்படுகிறது. வாரம் மும்முறை இரு மாநிலங்களுக்கு இடையே இயக்கப்படும் என ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இந்திய ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்  “விவசாயிகளின் விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைக்க கிசான் ரயில் நிச்சயம் உதவும். உள்ளூர் விவசாயிகள், வர்த்தகர்கள் ஆகியோரின் உதவியுடன் விவசாயிகளுக்கு அதிகபட்ச லாபம் கிடைக்க மத்திய ரயில்வே தொடர்ந்து சந்தைப்படுத்தும் பணியைச் செய்யும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

Leave a Comment