பாதங்களைப் பாதுகாக்க பத்துக் கட்டளைகள்

பரிணாம வளர்ச்சி அறிவியலில் மனித இனத்தை மற்ற விலங்கிலிருந்து தனித்துக் காட்டும் உறுப்பு , மனிதனின் பாதங்கள். 26 எலும்புகள், 33 கணுக்கள் ( Joints ), நூற்றுக்கும் அதிகமான தசைநார்களும் , தசைநாண்களும் துல்லியமான வடிவமைப்பும் , செயல்பாடும் - கொண்டு இயங்குவது மனிதனின் பாதங்கள்! அப்படிப்பட்ட பாதங்களுக்கு இது நெருக்கடியான காலக்கட்டம்.

காரணம், இந்தக் கரோனா காலங்களில் , மிகவும் பாதிக்கப்படுபவர்கள் சர்க்கரை உள்ளவர்கள்தான். அவர்களால் நடைப்பயிற்சி செய்யச் செல்லமுடிவதில்லை. இதனால், பாதங்களுக்கு போதிய ரத்த ஓட்டம் செல்லாமல் பலருக்குப் பாத புண்கள் வரலாம். எனவே பாதத்தை கவனிக்க வேண்டிய அக்கறையுடன் செயல்பட வேண்டிய தருணம் இது.

சீனாவைப் பின்னுக்குத்தள்ளி 2035 -ஆம் ஆண்டு இந்தியா , உலகின் நீரிழிவு நோயின் தலைநகரமாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 2016 ஆம் ஆண்டில் 20-லிருந்து 70 வயதிற்குட்பட்டவர்களில் - சர்க்கரையை வருவித்துக்கொண்ட இனிய இந்தியர்கள் 7 கோடி பேர். இதில் 25 சதவீதத்தினருக்குப் பாதப்புண் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் என்கிறது இந்திய மருத்துவர்கள் கழகம். அப்போது நீரிழிவு பாதப்புண்களுக்காக 30 சதவீதம் பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர்.

ரத்தச் சக்கரை அளவினைக் கட்டுப்படுத்தாவிட்டால் , உடலியங்கியல் செயல்முறையில்( Metabolic Complications) ஏற்படும் மாறுபாடுகள் காரணமாக உடலில் உள்ள நரம்புகள், ரத்த நாளங்கள், கண், சிறுநீரகத்தில் சார்பிட்டால் (Sorbitol) என்ற வேதிப்பொருளானது படிவமாக சேர்ந்து விடும்.


முதல் கேயடம்

ரத்தச் சக்கரை அளவினைக் கட்டுப்படுத்தாவிட்டால் , உடலியங்கியல் செயல்முறையில்( Metabolic Complications) ஏற்படும் மாறுபாடுகள் காரணமாக உடலில் உள்ள நரம்புகள், ரத்த நாளங்கள், கண், சிறுநீரகத்தில் சார்பிட்டால் (Sorbitol) என்ற வேதிப்பொருளானது படிவமாக சேர்ந்து விடும். இவை நாளடைவில் நரம்பு இயக்கத்தடையாகவும் ( Neuropathy), நுண்ணிய, பெரு ரத்த நாள அடைப்பாகவும்( Arteriopathy) உருவெடுப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். எனவே ரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைப்பது முதல் கேடயம்.

பாதப் புண் ஏற்பட்ட இனியர்களுக்கு, தன்னியக்க நரம்பு இயக்கத் தடையாகவும் ( Autonomic Neuropathy), நாளடைந்த உணர்வு மற்றும் இயக்க நரம்புத் தடையாகவும் ( Chronic Sensorimotor Polyneuropathy)நோய் முற்றுகிறது. மேலும் ரத்த நாள பாதிப்பால் , ரத்த ஊட்டக்குறைபாடு ( Ischemia) உள்ள பாதங்கள் நோய்க்கிருமி தொற்றுக்கு எளிதில் இலக்காகிவிடுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இதன் காரணமாக சர்க்கரை இனியர்களில் , 60 சதவீதம் பேருக்கு உணர்வு ( Sensory Neuropathy) மற்றும் இயக்க நரம்பு தடை (Motor neuropathy)ஏற்படுகின்றது. உணர்வு நரம்புகள் பாதிக்கப்படுவதால் ஏற்படும் பாத எரிச்சல் , குத்தல் ஆகியவை முற்றுகின்ற நிலையில் , உணர்வற்ற நிலை ஏற்படுகின்றது .இதன் விளைவாக , பாதத்தில் கல் , முள் போன்ற கூர்மையான பொருள் குத்தினாலும் , இனியர்கள் அதைக் கவனத்தில் கொள்வதில்லை. இதனால் எளிதாக நோய்க் கிருமிகள் காலை பதம் பார்க்கத் தொடங்கிவிடுகின்றன.

இயக்க நரம்பு ( Motor Nerve ) தசைநார்களையும் , தசைநாண்களையும் தூண்டி செயல்பட வைக்கின்றன. தசைநாண்கள் , பாத சிறுஎலும்பில் கோத்து , இணைந்து செயல்படுகின்றது. இந்த வகை நரம்புகள் பாதிக்கப்படும்போது தசைநாண்களும், நார்களும் சுருங்கி செயல் இழந்துவிடும். அதனால் அது கோத்து நிற்கின்ற பாதசிறு எலும்புகளின் வடிவத்தையும் , செயல்திசையையும் மாற்றிவிடுகின்றன.

நாம் நடக்கும்போதும் , ஓடும்போதும் , நிற்கும்போதும்- நம் உடல் எடையினைத் தாங்கி , இயக்கமுறையில் இருக்கும் பாத எலும்புகள் , வடிவிழந்து , திசைமாறி கூர்மையான எலும்புகளாக மாற்றப்படுகின்றன. இவை பாதக் கட்டமைப்பில் சுற்றி இருக்கும் மென்மையான திசுக்களின் , அழுத்தப்புள்ளியாக மாறி - பாதத்தோல் தடித்து ‘ஆணி’ என்ற சொல்லை நாம் பயன்படுத்துகின்றோம் . பாத ஆணியும், பொருந்தா காலணிகளும் ஆபத்தின் முதல் படி என்று நாம் அறிவதில்லை.

இவற்றைவிட , காலில் ஏற்படும் ரத்தநாள அடைப்பு-குருதி ஊட்டக்குறை (Ischemia) ஏற்படுகின்றது ! ரத்த ஓட்டம் தடைப்பட்ட கால்களும் , பாதங்களும் கிட்டத்தட்ட இருதய ரத்த ஓட்டப் பாதிப்பைப் போன்றே! ஆனால் கால்களில் உள்ள தசைநார்கள் ரத்த ஓட்டமில்லை என்றால் அழுகும்நிலையும் நோய்த்தொற்றும் வேகமாகப் பரவிவிடும்.
சர்க்கரை இனியர்களே..
இதோ பாதங்களைப் பாதுகாக்க 10 கட்டளைகள்


1. தினமும் காலை, மாலை இருவேளையும் பாதத்தை நன்றாக கூர்ந்து நோக்குதல் - சிறுபுண்கள் , காயங்கள் , சேற்றுப்புண்கள் , காலணிக் காயங்கள், நகக்கண் வீக்கங்கள் - உடனடிக் கவனம் தேவை நீங்கள் பார்ப்பதுடன் உங்கள்!  குடும்பத்தாரிடம் பாதத்தை தினம் ஒருமுறை பார்க்கச்சொல்லுங்கள். அப்போது உங்களுக்குத் தெரியாத மாறுதல்களைக் கூட அவர்கள் கண்டுபிடித்துவிடுவார்கள்.

2. வெறும் காலில் நடப்பதை அறவே தவிர்க்கவும் . சமூக , மத நம்பிக்கைக்காக வெறும் காலில் நடப்பது , நீரிழிவுப்பாதத்திற்கு உகந்தது அல்ல. தகுந்த காலணிகள் அணிந்து நடைப்பயிற்சி செய்யுங்கள்.

3. ஏற்கெனவே சர்க்கரைப் புண்ணால் உங்கள் பாதங்கள் பாதிக்கப்பட்டு மீண்டிருந்தால் தாங்கள் அணியும் காலணிகளுக்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் . பொருந்தாத காலணியை புறக்கணியுங்கள்.

4. விரல்கள் நடுவே அணிவது போன்ற காலணிகள் , பழைய நைந்த காலணிகள், கடின நெளிவற்ற ரப்பர் காலணிகள் - இவை அனைத்தையும் கண்டிப்பாக தவிர்க்கவும்.

5. பாதத்தை நன்றாகக் கழுவியபின் , சுத்தமான துணியால் காலினை துடைத்துவிட வேண்டும் . விரலிடை ஈரத்தை தவிர்த்தல் வேண்டும் .

6. விரல்களிடையே ஈரப்பசை , பூஞ்சைத் தொற்று ஏற்படவும் , அதன் வழியே கிருமித்தொற்று பாதத்தினுள் பரவும் ஆபத்து உள்ளது.

7. வசதி வாய்ப்புள்ளவர்கள் , நீரிழிவுப் பாதத்திற்கான சிறப்பு தூய்மை உறையினை ( Diabetic Socks) அணிந்து கொள்ளலாம் வேர்வை உறையினைத் தவிர்க்கவும்

8. பாதப்புண் உள்ள சர்க்கறை இனியர்கள் , சுடுநீரில் கால்களை ஊற வைப்பது ஆபத்தில் முடியும் .

9. நீரிழிவுபாதத்திற்கு ,சிறந்த காலணிகளாக - சுமை நீக்கப்பட்ட அழுத்தப் புள்ளிகள் நீக்கப்பட்ட காலணிகளே (Off Loading Footwear)ஆகும். இதன் மூலம் 75 சதவீத பாதப்புண்களைத் தவிர்க்கலாம். பாதத்தில் ஏற்படும் ஆணி , தோல் தடித்தல், வெடிப்பு , நிறம் மாறுதல் , புண் , காயங்கள் - உடனடி மருத்துவக் கவனிப்பு அவசியம் .

10. எப்பாடு பட்டேனும் ரத்த சக்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருத்தல் அவசியம்.

Comments

Leave a Comment