நிரந்தரமாக மூடப்படும் இரண்டு முக்கிய திரையரங்குகள்

சென்னையின் வடபழனியில் உள்ள ஏவி.எம்.ராஜேஷ்வரி திரையரங்கம்
சென்னைக் கோடம்பாக்கத்தின் முக்கிய பகுதி வடபழனி. இங்கிருக்கு  புகழ்பெற்ற முருகன் கோவில் மட்டுமல்ல; இங்குள்ள சினிமா ஸ்டுடியோக்களும் திரையரங்குகளும் புகழ்பெற்றவை. அவற்றில் ஒன்று ஏவி.எம் ஸ்டுடியோ வளாகத்திலேயே உள்ள ஏவி.எம். ராஜேஸ்வரி திரையரங்கு. சென்னையின் அடையாளங்களில்  ஒன்றாகவே மாறிப்போன சினிமா பிரபலங்கள் பலரும் படம் பார்க்கும் இந்த பெருமை கொண்ட இந்த சிங்கிள் ஸ்கிரீன் திரையரங்கும்.  பழைய வண்ணாரப்பேட்டையின் பழம்பெரும் சிங்கிள் ஸ்கிரீன் திரையரங்கான  மஹாராணியையும்  நிரந்தரமாக மூடப்படப் போவதாகத் தகவல் வந்திருக்கின்றன.

ஏன் மூடுகிறார்கள்?

கொரோனா ஊரடங்கு காரணமாக தியேட்டர் ஓடவில்லை, சம்பளம் கொடுக்க முடியவில்லை என்பது பெரிய காரணமாக இருக்க வாய்ப்பில்லை. காரணம், ஒவ்வொரு தியேட்டரிலும் ஆப்பரேட்டர்கள், காவலாளி, வாகன டோக்கன் ஆள், கேண்ட்டீன் ஆட்கள், பராமரிப்பு ஆட்கள் என்று 10-15 பேர்வரைதான் இருக்க வாய்ப்புண்டு. பல தியேட்டர்களில் கேண்ட்டீன் என்பது காண்ட்ராக்ட்டில் இயங்குகிறது. எனவே அவர்களுக்கான சம்பளப் பிரச்சனையும் தியேட்டர் உரிமையாளர்களுக்கு இல்லை.

பழைய வண்ணாரப் பேட்டையில் உள்ள மகாராணி திரையரங்கம்
தியேட்டர் வாடகை..?

அதுவும் பெரிய காரணமாக இருக்க வாய்ப்பில்லை. உலகமே முடங்கிக் கிடக்கும்போது யாரும் வாடகை கேட்டுக் கழுத்தில் கத்தி வைப்பதில்லை.  பிறகு நல்ல கூட்டம் வரும் தியேட்டர்களை மூட முடிவு செய்ததற்கு என்னதான் காரணமாக இருக்க முடியும்?  வருடாந்திர வரவு செலவுக் கணக்கில் ஏற்படும் நஷ்டம் மிகப் பெரிய காரணம் எனத் தெரிய வருகிறது. ஏவி.எம்.ராஜேஸ்வரி திரையரங்கின் உரிமையாளர் பல வருடங்களாக லட்சங்களில் கைக்காசு போட்டு நடத்திக்கொண்டிந்ததாகக் கேள்வி. ஆசையுடன் அதனை ஆரம்பித்தவரின் நினைவாக நஷ்டமானாலும் பரவாயில்லை என்ற கொள்கையில்!  இப்போது தாக்குப் பிடிக்க முடியவில்லை. மஹாராணி தியேட்டர் உரிமையாளருக்கோ வயதாகி விட்டதாம். தன் இறுதிக் காலம்வரை நடத்த வேண்டும் என்ற முனைப்புக் காட்டினார். ஆனால், கடந்த வருட கணக்குப்படி அவருடைய நஷ்டம் சுமார் 45 லட்சம். நஷ்டத்தின் பிரமாண்டம் கண்ணைக் கட்டி இழுக்க, நிரந்தரமாக மூடுவது என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்.

விரைவில் இவர்களை முன் மாதிரியாகக் கொண்டு மேலும் பல சிங்கிள் ஸ்கிரீன் தியேட்டர்கள் மூடப்படும் அபாயம் உருவாகியிருக்கிறது.  படங்களைத் தயாரிக்கும் தயாரிப்பாளர்களில் பெருமளவில் நஷ்டப்படுகிறார்கள். சிங்கிள் தியேட்டர்களை நடத்தும் உரிமையாளர்கள் அல்லது லீஸ் எடுத்து நடத்துபவர்கள் பாதிக்குமேல் நஷ்டப்படுகிறார்கள். எல்லா விநியோகஸ்தர்களும் லாபத்தில் இயங்குகிறார்களா என்பது கேள்விக்குறி. சினிமாவுக்கு ஃபைனான்ஸ் செய்பவர்கள் பல நேரம் வட்டியையும், சில நேரம் கொஞ்சம் அசலையும் விட்டுக் கொடுத்துத் தொழில் செய்யும் செய்திகளையும் அவ்வப்போது கேள்விப்படுகிறோம்.

எனில்...

படங்களின் தயாரிப்புக்குச்செய்யப்படும் முதலீடும், விற்பனை மூலம் வரும் காசும் எங்கு செல்கின்றன? தயாரிப்பு, ஃபைனான்ஸ், விநியோகம், தியேட்டர் என்று அனைத்து நிலைகளின் வரவு செலவு விபரங்களையும் ஆராய்ந்து லாபத்திற்கான பாதையை வகுக்க வேண்டிய கட்டாயத்தில் திரையுலகம் இருக்கிறது.  ஒருவரையொருவர் குற்றம் சுமத்தி, பழி போட்டு நிலைமையை மேலும் மோசமாக்குவதில் பயனில்லை.  இந்த இரண்டு தியேட்டர்களோடு போகட்டும். இனியொரு தியேட்டர் மூடப்படக் கூடாது. வரும் காலத்தில் மேலும் பல மினி தியேட்டர்கள் உருவாக வேண்டிய தேவை இருக்கிறது. எனவே,  தயாரிப்பாளர்கள், திரையரங்கத்தைச் சேர்ந்தவர்களை அழைத்து விபரங்களைத் திறந்த மனதுடன் கேட்டு, விவாதித்தால் மட்டுமே இப்படித் திரையரங்கள் மூடப்படுவதைத் தவிர்க்க முடியும் என்கிறார்கள் களத்தில் நிற்கும் பல சிறிய முதலீட்டுத் தயாரிப்பாளர்கள்.




Comments

Leave a Comment