திருத்தணியைச் சேர்ந்த மாதவ் கிருஷ்ணா என்ற இளைஞர், ஜப்பான் நாட்டில் வேலை பார்த்து வந்தார். உடல் நலக்குறைவால் ஜூலை 29-ஆம் நாள் ஜப்பானிலேயே இயற்கை எய்தினார். உடலை அனுப்பி வைக்கும்படி உறவினர்கள் காணொலி வழியாக ஜப்பான் நாட்டுக்கு கொரிக்கை வைத்தனர். ஆனால், ஜப்பான் அந்தக் கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டது.
ஜப்பான் நாட்டுச் சட்டப்படி, அவரது உறவினர்கள் யாரேனும் ஜப்பானுக்கு வந்து, உடலை அடையாளம் காட்டி, பெற்றுக் கொள்ள வேண்டும் என்று, ஜப்பான் காவல்துறையினர் கூறினர்.
இந்தியாவில் இருந்து ஜப்பானுக்கு வான் ஊர்திகள் இல்லை என்பதைக் கூறி, அவருடைய நண்பர்கள் உடலை அடையாளம் காட்டுவார்கள் என்றும், அவர்களிடம் ஒப்படைக்குமாறும் குடும்பத்தினர் விடுத்த வேண்டுகோளையும் ஜப்பான் காவல்துறையினர் ஏற்கவில்லை. இது தொடர்பாக, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ, அயல் உறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரின் கவனத்திற்குக் கொண்டு சென்றார். ஜப்பானில் உள்ள இந்தியத் தூதரகத்தையும் தொடர்பு கொண்டார்.
தொடர்ந்து இடையறாத முயற்சிகளை மேற்கொண்டதன் விளைவாக, ஆகஸ்ட் 6 ஆம் தேதி, உடலைத் தருவதற்கு, ஜப்பான் காவல்துறையினர் இசைவு தெரிவித்தனர். இதையடுத்து மாதவ் கிருஷ்ணாவின் உடல், நேற்று டோக்யோவில் இருந்து கத்தார் ஏர்வேஸ் பெட்டக வான் ஊர்தியில் ஏற்றப்பட்டு, கத்தார் நாட்டின் தலைநகர் டோகா போய்ச் சேர்ந்தது.
இன்று (15.8.2020) மாலை 7 மணிக்கு வந்து சேரும் என, அயல் உறவுத் துறை அமைச்சகம், வைகோ அவர்களுக்குத் தகவல் தெரிவித்து இருக்கின்றது. மாதவ் கிருஷ்ணாவின் உடல் இன்று இரவு சென்னைக்கு வருகிறது. அவரது குடும்பத்தினர் உடலைப் பெற்றுக் கொள்கின்றார்கள்.
தமிழ் இளைஞரின் உடலை தர மறுத்த ஜப்பான்!

Comments