கட்சிமாறிய கு.க.செல்வம் திமுகவிலிருந்து அடியோடு நீக்கம்!

சென்னையை திமுகவின் கோட்டை என்று அரசியல் பார்வையாளர்கள் குறிப்பிடுவர். குறிப்பாக ஆயிரம் விளக்குத் தொகுதியில் இஸ்லாமிய மக்கள் அதிகம் வசிப்பதால், அங்கே கத்தத் தெரியாத கழுதையை நிறுத்தினால் கூட அவர் ஜெயித்துவிடுவார் என்பதே கடந்த 50 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வருகிறது. இந்நிலையில் ஆயிரம் விளக்குத் தொகுதியில் தற்போது சட்டப்பேரவை உறுப்பினராக இருந்துவரும் கு.க.செல்வம், திமுக தலைமை நிலைய அலுவலகச் செயலர், தலைமைச் செயற்குழு உறுப்பினர் உள்ளிட்ட பல பொறுப்புகளை வகித்தவர். அதிமுகவில் எம்ஜிஆர் மறைவுக்குப் பின் ஜானகி அணியில் இருந்த கு.க.செல்வம், பின்னர் அரசியலை விட்டு விலகியிருந்தார். 1996-க்குப்பின் அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்தார்.

 ஸ்டாலினுக்கு நெருக்கமான இவர், திமுக மாவட்டச் செயலாளராகப் பல முறை முயன்றார். ஜெ.அன்பழகன் வலுவாக இருந்ததால் இவருக்கு வாய்ப்புத் தட்டிப்போனது. இந்நிலையில் ஜெ.அன்பழகன் மறைவுக்குப் பின் சென்னை மேற்கு மாவட்ட பொறுப்பாளர் வாய்ப்பு தனக்குக் கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த நிலையில், சிற்றரசு நியமிக்கப்பட்டார். இதனால் அதிருப்தியில் இருந்த கு.க.செல்வம், தமிழக பாஜக தலைவர் முருகன் மூலம் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவை டெல்லியில் சந்தித்தார். அப்போது ஸ்டாலினை விமர்சித்துப் பேட்டியும் அளித்தார். இதனால் அவரை இடைநீக்கம் செய்த திமுக தலைமை அவருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. அதற்கு அவர் விளக்கம் அளித்திருந்தார்.

இந்நிலையில் கமலாலயம் சென்று ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவிலும் கு.க.செல்வம் கலந்துகொண்டார். கு.க.செல்வம் பாஜகவில் இணைந்ததாகக் கூறப்பட்ட நிலையில், அவரது விளக்கத்தை நிராகரித்துள்ள திமுக அவரைக் கட்சியின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கியுள்ளது.

இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “திமுக தலைமை நிலைய அலுவலகச் செயலாளர் மற்றும் தலைமைச் செயற்குழு உறுப்பினர் பொறுப்புகளிலிருந்து விடுவிக்கப்பட்ட கு.க.செல்வம் திமுக கட்சிக் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், அவரிடம் கேட்கப்பட்ட விளக்கத்திற்கு அளித்த பதில் ஏற்றுக் கொள்ளும்படி இல்லாத காரணத்தால், அவர் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நிரந்தரமாக நீக்கப்படுகிறார்” இவ்வாறு திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Comments

Leave a Comment