எம்எம்ஆர் முத்ததடுப்பூசி கரோனாவை ‘கெட்-அவுட்’ சொல்லுமா?

அடர்த்தியாகப் படர்ந்த இருளைப் போக்க ஒரு மெழுவர்த்தி போதும் என்பார்கள். இன்று உலகையே மூடிக்கொண்டிருக்கும் கரோனா பெருந்தொற்றிலிருந்து மனித இனத்தைக் காக்க, உலகம் முழுவதிலும் உள்ள மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கரோனாவுக்குத் தடுப்பூசியைக் கொண்டுவருவதில்தான் முழுக் கவனம் செலுத்துகின்றனர். அதோடு, இதுவரை வடிவமைக்கப்பட்டுள்ள கரோனா தடுப்பூசிகள் மனிதப் பயன்பாட்டுக்கு வரும்வரை, ஏற்கெனவே நடைமுறையில் உள்ள தடுப்பூசிகள் பலன் தருமா என்பதிலும் கவனத்தைத் திருப்பியுள்ளனர். இந்த வழியில் கண்டுகொண்டதுதான் குழந்தைகளுக்குப் போடப்படும் பிசிஜி தடுப்பூசி. அண்மையில், தமிழகத்தில் கரோனா தடுப்புக்காக 50 வயதைக் கடந்தவர்களுக்கு பிசிஜி தடுப்பூசியைப் போடும் திட்டம் அமலுக்கு வந்துள்ளதை இங்கே நினைவுகூரலாம். இந்த வரிசையில் இப்போது புதிதாகப் புலர்ந்துள்ள நம்பிக்கை நட்சத்திரம்தான் ‘எம்எம்ஆர்’ (MMR) தடுப்பூசி!

தட்டம்மை, அம்மைக்கட்டு, ருபெல்லா எனும் ஜெர்மன் தட்டம்மை ஆகிய மூன்று தொற்றுநோய்களை உண்டாக்கும் கிருமிகளை வீரியம் இழக்கச்செய்யும் ஆற்றல் எம்எம்ஆருக்கு இருக்கிறது. கல்லாப் பெட்டிக்கு முதன்மைச் சாவியுடன் உதவி சாவிகளும் இருப்பதுபோல் இது முத்தடுப்பு ஊசியாகப் பணியாற்றுவதுடன், உடலுக்குப் பொதுவான தடுப்பாற்றலையும் தருகிறது. இந்தத் தடுப்பாற்றல் கரோனாவையும் கட்டுப்படுத்த உதவுகிறது என்பதுதான் கூடுதல் தகவல்.

உலக அளவில் குழந்தைகளுக்கு கரோனா பாதிப்பு மிகவும் குறைந்த விகிதத்தில் இருப்பதற்கு எம்எம்ஆர் தடுப்பூசி அவர்களுக்குப் போடப்பட்டுள்ளதும் ஒரு காரணமாகக் கருதப்படுகிறது. இந்தத் தடுப்பூசி கரோனாவிலிருந்து நம்மைப் பாதுகாக்கிறது என்பதற்கு ஆராய்ச்சியாளர்கள் முன்வைக்கும் ஆதாரங்களில் முக்கியமானது, கரோனா வைரஸ் அமைப்பு. எம்எம்ஆர் தடுப்பூசியில் உள்ள தட்டம்மைக் கிருமியின் அமைப்போடு 20%, ருபெல்லா கிருமியின் அமைப்போடு 30% கரோனா வைரஸ் ஒத்துப்போகிறது. இதனால், இந்தத் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு உண்டாகும் ரத்த எதிரணுக்களும் (Antibodies), கரோனா நோயாளிகளுக்கு உண்டாகும் எதிரணுக்களும் ஏறத்தாழ ஒன்றுபோலவே இருக்கின்றன. இதனால், இயல்பாகவே எம்எம்ஆர் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு கரோனாவுக்கும் சேர்த்து தடுப்புத்தன்மை உண்டாகிவிடுகிறது என்கின்றனர்.

அடுத்ததாக, அமெரிக்காவில் நியூ ஆர்லியன்ஸ் (New Orleans) நகரத்தில் ஃபிடெல் (Dr.Fidel) மற்றும் மெய்ரி நோவிர் (Dr.Mairi Noverr) நடத்திய ஆராய்ச்சியில் எம்எம்ஆர் தடுப்பூசியானது பயனாளியின் எலும்பு மஜ்ஜையில் ‘MDSCs’ (Myeloid-derived suppressor cells) எனும் தடுப்பாற்றல் செல்களைத் தூண்டி, உடலுக்குள் நுழையும் பாக்டீரியா, வைரஸ் உள்ளிட்ட பல்வேறு நோய்க் கிருமிகளுக்கும் பொதுவான பாதுகாப்பைப் பெற்றுத் தருகிறது என்பது அறியப்பட்டுள்ளது. மேலும், இது இயற்கையான தடுப்பாற்றலைக் கொடுப்பதால் நோய்க் கிருமிகள் உடலுக்குள் நுழைந்ததுமே முதல்கட்டத் தடுப்பாக இருப்பதும், அந்தத் தடுப்பாற்றல் உடலில் நீண்ட காலம் நீடிக்கிறது என்பதும் தெரியவந்துள்ளது.

இந்தத் தடுப்பூசி கரோனாவுக்கு எதிராக எப்படிச் செயல்படுகிறது என்ற கேள்விக்கு அவர்கள் கொடுத்துள்ள பதில் இது: ‘MDSCs’ தடுப்பாற்றல் செல்கள் உடல் உறுப்புகளில் அழற்சி உண்டாவதைத் தடுப்பதில் முன்னணியில் நிற்கின்றன. கரோனா வைரஸ் தாக்குதலில் அழற்சியும் ‘செப்சிஸ்’ எனும் நச்சுத்தன்மையும் ஏற்படுவதால்தான் உயிருக்கு ஆபத்து நேருகிறது. எம்எம்ஆர் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு இப்படியான அழற்சி நிலைகள் உருவாவது தடுக்கப்படுவதால், கரோனாவால் ஏற்படும் மரணங்கள் தவிர்க்கப்படுகின்றன என்கின்றனர் ஃபிடெல் மற்றும் மெய்ரி நோவிர்.

ஆதாரங்கள் என்ன?

அமெரிக்காவின் கப்பல்படையைச் சேர்ந்த ரூஸ்வெல்ட் கப்பலில் பயணித்த 955 மாலுமிகளுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. ஆனாலும், அவர்களில் ஒருவர் தவிர மற்ற எல்லோருக்கும் கரோனா அறிகுறிகளே காணப்படவில்லை. அமெரிக்க மாலுமிகளுக்குப் பணியில் சேரும்போதே எம்எம்ஆர் தடுப்பூசி போடப்படுவது வழக்கத்தில் உள்ளதுதான் இதற்குக் காரணம் என்கின்றனர். மேலும், அமெரிக்காவின் சமோவ் தீவுகள், ஹாங்காங், மடகாஸ்கர், தென்கொரியாவில் கரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதற்கு அங்கு எம்எம்ஆர் தடுப்பூசி போடப்படுவது நடைமுறையில் இருப்பதை இவர்களின் ஆராய்ச்சி முடிவுக்கு ஓர் ஆதாரமாக முன்வைக்கின்றனர். அதே நேரத்தில், எம்எம்ஆர் தடுப்பூசி நடைமுறையில் இல்லாத நாடுகளில் கரோனாவால் ஏற்படும் இறப்பு விகிதம் அதிகம் என்பதையும் சுட்டுகின்றனர்.

தவிரவும், எம்எம்ஆர் தடுப்பூசி நடைமுறைக்கு வந்து 50 ஆண்டுகள்தான் ஆகின்றன. 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் இந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வாய்ப்பில்லை. வயது வந்தவர்களுக்கு கரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதற்கு அவர்கள் எம்எம்ஆர் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை என்பதும் ஒரு முக்கியக் காரணம் என்கின்றனர். குழந்தைகளுடன் ஒப்பிடும்போது 50 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு கரோனாவால் ஏற்படும் இறப்பு விகிதம் சற்றே அதிகம்தான் (4.5%). இவர்களுக்குக் குழந்தைப் பருவத்தில் எம்எம்ஆர் தடுப்பூசி போடப்பட்டிருந்தாலும் வயதாக ஆக உடலில் தடுப்பாற்றல் தன்மை வீரியம் இழந்திருக்கலாம் எனக் கருதுகின்றனர்.

யாருக்கு அவசியம்?


எம்எம்ஆர் தடுப்பூசி ஏற்கெனவே நடைமுறையில் இருப்பதால் இதன் பக்கவிளைவுகள் போன்றவற்றை அறிய கள ஆய்வுகள் தேவையில்லை என்கின்றனர் ஃபிடெல் மற்றும் மெய்ரி நோவிர். அவர்கள் ஆலோசனைப்படி, கரோனா தடுப்பில் முதல்நிலையில் இருக்கும் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், துப்புரவுப் பணியாளர்கள், காவல் துறையினர் போன்றோருக்கும் 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் கரோனா தொற்று ஏற்படுவதைத் தடுக்க எம்எம்ஆர் தடுப்பூசி போட்டுக்கொள்வதைக் கட்டாயமாக்கலாம். செலவு குறைந்த இந்த ஊசியை ஒரு மாத இடைவெளியில் இரு தவணைகளாகப் போட்டுக்கொள்ள வேண்டும். நாட்டின் மக்கள்தொகையில் கால் பங்கினருக்கே இது தேவைப்படுவதால் குறைந்த செலவில் நிறைய பலனை எதிர்பார்க்கலாம்.

கரோனா தடுப்பு விஷயத்தில் பிசிஜி தடுப்பூசியை உலக ஆராய்ச்சியாளர்கள் முன்மொழிந்தபோது எதிர்மறைக் கருத்துகளும் எழுந்தன. ஆனால், எம்எம்ஆர் தடுப்பூசி விஷயத்தில் எல்லோரும் ஒரே குரலில் நேர்மறைக் கருத்துதான் சொல்லியிருக்கின்றனர். ஆகவே, உலகளாவியப் பெருந்தொற்றாகி, பாதிப்பின் உச்சத்தில் இருக்கும் கரோனாவுக்கு முறையான தடுப்பூசி வரும்வரை இடைக்கால நிவாரணமாக எம்எம்ஆர் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டால் அநேக மரணங்களைத் தவிர்க்கலாம் என்பது திண்ணம். இந்த அறிவியல் விஷயத்தை மத்திய அரசு உடனடியாக ஆராய்ந்து மக்களுக்கும் மருத்துவர்களுக்கும் சரியான வழிகாட்ட வேண்டும்.

நன்றி: டாக்டர்  கு.கணேசன்,

 மருத்துவ இதழாளர்.

தட்டம்மை, அம்மைக்கட்டு, ருபெல்லா எனும் ஜெர்மன் தட்டம்மை ஆகிய மூன்று தொற்றுநோய்களை உண்டாக்கும் கிருமிகளை வீரியம் இழக்கச்செய்யும் ஆற்றல் எம்எம்ஆருக்கு இருக்கிறது.

டாக்டர் கு.கணேசன், பொதுநல மருத்துவர்

Comments

Leave a Comment