உத்திரப் பிரதேசத்தில் குப்பை வண்டியில் ஏற்றப்பட்ட உடல்! தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

உத்தரப்பிரதேச மாநிலத்தின் அரசு அலுவலகம் ஒன்றின் முன்பாக,  மயக்கமாகி விழுந்து உயிரிழந்தவரின் உடலை, நகராட்சியின் குப்பை அள்ளும் வண்டியில் ஏற்றிச் சென்ற விவகாரம் பெரிதாக வெடித்துள்ளது. இது தொடர்பாக விளக்கம் கேட்டு கோரி ஆதித்யா நாத் தலைமையிலான அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம், சிறுபான்மையினர் நல ஆணையம் ஆகியவை நோட்டீஸ் அனுப்பியுள்ளன.

உத்தரப் பிரதேசம் மாநிலம் பல்ராம்பூர் மாவட்டத்தில் உள்ள தாலுக்கா நகரம் உத்ராவுலா. அங்குள்ள அரசு அலுவலகம் ஒன்றின் முன்பாக அன்வர் அலி (வயது 42) என்பவர் கடந்த புதன்கிழமை  மயங்கி விழுந்து உயிரிழந்தார். இவருக்கு கரோனா வந்திருக்குமோ என அஞ்சி மக்கள், அவரது அருகில் செல்ல பயந்தனர். இதனை அறிந்த நகராட்சி நிர்வாகம், அவரின் உடலை குப்பை அள்ளும் வண்டியில் குப்பைபோடு குப்பையாக நகராட்சி ஊழியர்கள் நான்கு பேர் தூக்கிவீசி எடுத்துச் சென்ற சம்பவம் மூன்று போலீஸார் முன்னிலை தான் நடந்தது. இந்த சம்பவத்தை ஸ்மார்ட் போனில் படமெடுத்த பலரும் அவற்றைச் சமூக ஊடகங்களில் வெளியிட பெரும் சர்ச்சையானது. இதையடுத்து நகராட்சி ஊழியர்கள் நான்கு பேர், மூன்று போலீஸார் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஊடகங்களின் வழியாக அறிந்த தேசிய மனித உரிமை ஆணையம், சிறுபான்மையினர் நல ஆணையம் ஆகியன, உத்தரப்பிரதேச அரசு, பல்ராம்பூர் நகராட்சி ஆணையர், உ.பி. போலீ்ஸ் டிஜிபி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளன. மேலும் அறிக்கை ஒன்றையும்  தேசிய மனித உரிமை ஆணையம் வெளியிட்டது.

அந்த அறிவிப்பில் “சாலையில் திடீரென விழுந்து உயிரிழப்போரின் உடலை எவ்வாறு மரியாதையாக எடுத்துச்செல்ல வேண்டும், அல்லது உடல்நலமில்லமல் சாலையில் விழுவோருக்கு எவ்வாறு மருத்துவ சிகிச்சையளிக்க வேண்டும் என்பது குறித்து அனைத்து நகராட்சிகளுக்கும் தலைமைச் செயலாளர் விரிவான வழிகாட்டல் வழிமுறைகளை தெரிவிப்பார் என எதிர்பார்க்கிறோம்.

சாலையில் ஒருவர் விழுந்து உயிரிழந்தபின் அவரின் உடலை நகராட்சி ஊழியர்கள் குப்பை வண்டியில் கொண்டு சென்ற சம்பவம் அதிர்ச்சியளித்து. அரசுஊழியர்களிடம் இருந்து இதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இது எங்களுக்கு வெட்கமாகவும்,மனித நேயமற்ற முறையிலும் இருந்தது. உயிரிழந்தவர் உடலை எப்போதும் மனிதநேயத்துடன்,மரியாதையாக நடத்த வேண்டும். நகராட்சி ஊழியர்களும், போலீஸாரும் நடந்து கொண்ட முறை நாகரீகமான சமூகத்தில் ஏற்க முடியாதது. அவர்கள் கடமையை செய்ய மட்டும் தவறவில்லை, கொடூரத்தின் உச்சத்தைக் கடந்து செயல்பட்டு தீவிரமான மனித உரிமை மீறலில் ஈடுபட்டுள்ளார்கள். கரோனாவில் இறந்தவர்களை அடக்கம் செய்யும் போது இறந்தவர்களி்ன் உறவினர்களுக்குத் தேவையற்ற இடையூறை அளிக்காமல் இருக்க வேண்டும். இந்த விவகாரத்தில் விரிவான அறிக்கையை பல்ராம்பூர் நகராட்சிஆணையர், தலைமைச் செயலாளர் , போலீஸ் டிஜிபி ஆகியோர் 4 வாரங்களில் தாக்கல் செய்ய வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Comments

Leave a Comment