ஆகஸ்ட் 15: அன்னை மரியாவின் விண்ணேற்பு தினம்

இந்தியா தனது 74-வது சுதந்திர தினத்தை இன்று கொண்டாடிக் கொண்டிருக்கிறது. இந்த முக்கியமான நாளின் மற்றுமொரு முக்கியத்துவம், அதன் புனிதம். ஆம்!  இறைமகன் இயேசுவின் தாயாகிய அன்னை மரியாவின் விண்ணேற்பு  பெற்ற நாள். அதனை அன்னை மரியாவின் விண்ணேற்பு பெருவிழாவாக உலகம் முழுவதும் வாழும் கத்தோலிக்க கிருஸ்தவ மக்கள் கொண்டாடுக்கிறார்கள்.

இப்பெருவிழாவின் முக்கியத்துவம், இது மக்களுக்குத் தரும் செய்தி போன்றவற்றை எண்திசை.காம் இணையத்துடன் பகிர்ந்துகொள்கிறார், வாடிகன் மரியாயின் ஊழியர் சபையில் அங்கம் வகிக்கும் அருள்பணித் தந்தை அமல்ராஜ்.

அவர் நம்மிடம் பேசுகையில்: “ மரியன்னை விண்ணேற்புப் பெருவிழா கத்தோலிக்க திருஅவையால் அங்கீகரிக்கப்பட்ட நான்கு கோட்பாடுகளுள் ஒன்று. அதாவது 1. அன்னை மரியாள் இறைவனின் தாய். 2. அன்னை மரியாள் என்றும் கன்னி. 3. அன்னை மரியாள் அமல உற்பவி. 4. அன்னை மரியாள் உடலோடும் ஆன்மாவோடும் விண்ணுலகிற்கு எடுத்துக்கொள்ளப்பட்டார் ஆகியனதான் அந்த 4 கோட்பாடுகள்.

நான்காவது கோட்பாட்டினை போப் திருத்தந்தை 12-ஆம் பத்திநாதர் 1950-ம் ஆண்டு ‘மரியன்னை விண்ணேற்ப்பு பெருவிழா’வாக வாடிகனில் அதிகாரபூர்வமாக அறிவித்தார். ஆனால், கடந்த 20 நூற்றாண்டுகளாக இயேசுவின் சீடர்கள் காலத்திலிருந்தே கொண்டாடப்பட்டு வந்திருப்பதை ஆராய்சியாளர்களும் இறையியல் அறிஞர்களும் நிறுவியுள்ளனர்.

இறைவனின் கட்டளையை ஏற்று, கிருஸ்துவை ஆதிப்பாவம் இல்லாமல் உருவாக்கிய அமல உற்பவியாக தேர்ந்துகொள்ளப்பட்ட அன்னை மரியாள், கிருஸ்து மனிதகுலத்துக்கு அளித்த மீட்பின் பயணத்தில் இயேசுவின் பிறப்பு, அவரது பணி வாழ்வு, சிலுவைப் பயணம், இறப்பு மற்றும் திருச்சபையின் பிறப்பில் தன்னையே முழுமையாக இணைத்துக் கொண்டு ஊழியம் செய்தது என இறை ஊழியராக தன்னை அர்ப்பணித்ததால், ‘உடலோடும் ஆன்மாவோடு விண்ணுலகிற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது’ மரியாளுக்கு இறைவனால் கொடுக்கப்பட்ட சிறப்புப் பரிசாகும்.

கடவுளால் கொடுக்கப்பட்ட கிறிஸ்தவ வாழ்கை நம்பிக்கையுடனும் முழுமையுடனும் வாழ்ந்துகாட்டிய முன்னோடி மற்றும் முன்மாதிரி இறை ஊழியர் மரியாள். அவருக்கு அளிக்கப்பட்ட விண்ணேற்பு அவரது அர்பணிப்புக்கு கிடைத்த அங்கீகாரம். மனிதகுலத்துக்கு தலைசிறந்த முன்மாதிரி” என்கிறார் தந்தை அமல்ராஜ். உலகம் முழுவதும் வாழும் கத்தோலிக்க கிருஸ்தவ மக்களுக்கு எண்திசை மீடியா தனது வாழ்த்துதல்களைத் தெரிவித்துக்கொள்கிறது.
 

 

Comments

Leave a Comment