அதென்ன தமிழ் பிராமி எழுத்து ? - ஒரு வரலாற்று மோசடி

28-10-2012 ஆம் நாளிட்ட ஆங்கில ஏடான இந்து நாளிதழில் வந்திருந்த ஒரு கட்டுரை. தலைப்பு : “POTSHRED WITH TAMIL-BRAHMI SCRIPT FOUND IN OMAN”. அதாவது ஓமன் நாட்டில் கண்டெடுக்கப்பட்ட ஓட்டுச்சில்லில் தமிழ்-பிராமி எழுத்துக்கள் என்பது அதன் பொருள்.

இதைப்பற்றி இந்துவின் இணையதள இதழிலும் வந்தது. இந்தச் செய்தி உண்மையிலேயே தமிழின் தொன்மையையும் தமிழர்கள் கடல் கடந்து மிகப்பழங்காலத்திலேயே பல நாடுகளில் தங்கள் குடியேற்றத்தைச் செய்து கால் பதித்து கலாச்சாரத்தைப் பதித்திருக்கிறார்கள் என்பது ஒவ்வொரு தமிழனும் நெஞ்சு நிமிர்த்தி பெருமை கொள்ளத்தக்கது.

மேற்கூறிய செய்திகளில் தெரிய வருவது நம்மை அதிசயத்தில் உறைய வைக்கிறது. இப்படிப்பட்ட தமிழ் எழுத்துக்கள் தாங்கிய ஓட்டுச்சில்லுகள் மத்தியத் தரைக் கடலின் மேற்குப்பகுதியான எகிப்து முதல் கிழக்குப்பகுதியில் தாய்லாந்து, வியட்நாம் போன்ற நாடுகள் வரை பல்வேறு இடங்களில் கிடைக்கின்றன என்றும் இதற்கான செய்திகள் அவ்வப்போது இந்து நளிதழ் உட்பட  பல்வேறு மேலை நாட்டு செய்தித்தாள்களிலும் வெளிவந்திருக்கின்றன.

அடடா! “யாதும் ஊரே யாவரும் கேளிர்!” என்று தமிழன் சும்மா பாட்டாக மட்டும் பாடி வைக்கவில்லை! ஓட்டிலும் எழுதி பல நாடுகளில் ஒட்டி வாழ்ந்திருக்கிறான் என்பது எவ்வளவு பெருமைபடத்தக்க செய்தி!

இப்போது கண்டுபிடிக்கப்பட்ட ஓட்டுச்சில்லு கோர் ரோரி (KHOR RORI) என்ற ஓமன் நாட்டுப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஓட்டுச்சில்லில் “நந்தை கீரன்” என்று எழுதப்பட்டிருக்கிறதாம்! இப்போது நாம் பேசிப்பழகி எழுதி வரும் தமிழ் எழுத்து வடிவில் அல்ல! மிகப் பழங்காலத்தில் தமிழ் எழுதப்பட்ட எழுத்து வடிவில்! அதை வல்லுனர்கள் தமிழ்-பிராமி என்று அழைக்கிறார்கள். தமிழ் என்பது சரி. அதென்ன பிராமி?

இதில் ஒரு வரலாற்று மோசடி ஒளிந்து கொண்டிருக்கிறது.

ஒருவேளை, பிராமி என்பது சமஸ்கிருத எழுத்தா? சமஸ்கிருதம் எப்போதுமே எழுதப்பட்டதே இல்லையே! அதற்குத்தான் எழுத்து வடிவமே கிடையாதே! எல்லாம் வாய்மொழியோடு சரி! அதனால்தானே வடவேதத்திற்குக் கூட எழுதாக்கிளவி என்று கூறினார்கள்.

பழங்காலத்தில் சமஸ்கிருதத்தைப் பேசியவர்கள் அதை ஏன் எழுதவில்லை? சிந்திக்க வேண்டிய விசயம்! உலகிலேயே முதன்முதலில் தான் பேசும் மொழிக்கு எழுத்து வடிவம் கொடுத்தவன் தமிழன்! அதைக் கல்லிலும், ஓட்டிலும், ஓலையிலும் எழுதிப்பார்த்தவன் தமிழன்! சமஸ்கிருதத்திற்கு எழுத்து வடிவமே கிடையாது. இன்று நாம் சமஸ்கிருதத்தை தேவநாகரி என்றும், கிரந்தம் என்றும் இரண்டு இரவல் வாங்கப்பட்ட எழுத்து வடிவில் எழுதிப்படிக்கிறோம். இது இரவல் வாங்கியது!

சமஸ்கிருதத்திற்குச் சொந்தமில்லாதது. கி.பி.5 ஆம் நூற்றாண்டில் சமஸ்கிருதத்திற்குத் தமிழ்நாட்டில் கிரந்தம் என்ற தமிழ் எழுத்துக்கள் உள்ளடக்கிய எழுத்து வடிவம் தமிழ் சிவாச்சாரியார்களால் பல்லவர் காலத்தில் உருவாக்கப்பட்டது. அதனால் அதற்கு பல்லவ கிரந்தம் என்றே பெயர்.

அதற்குப்பின் பல நூற்றாண்டுகட்குப்பின் இந்தி மொழி உருவாகிய பின் வடநாட்டினர் சமஸ்கிருதத்திற்கு எழுத்து வடிவத்தை இந்தி வடிவில் கொடுத்ததுதான் தேவநாகரி. அப்படியானால் மிகப் பழங்காலத்தில் சமஸ்கிருதம் உருவான போது ஏன் எழுத்து வடிவம் அதற்கு இல்லை? ஒரு நொண்டிச் சமாதானம் அதற்குச் சொன்னார்கள் – எழுதினால் அதற்கு ஆற்றல் போய்விடுமாம்!

இது இப்படி இருக்க மேற்கண்ட தமிழ் எழுத்துக்கள் கிறித்து பிறப்பதற்கு பல ஆயிரம் ஆண்டுகட்கு முன்பிருந்தே எழுதப்பட்டு வந்திருக்கிறது என்று ஓமன் நாட்டில் கண்டெடுத்த ஓட்டுச் சில்லுகளைப்போல பல சான்றுகள் கிடைத்துக் கொண்டே வருகின்றன. இவ்வாறு முதன் முதலில் பல ஆயிரம் ஆண்டுகட்கு முன்பே தமிழில் எழுதி வந்திருக்க அதற்கு ஏன் பிராமி என்று ஒரு சமஸ்கிருதப் பெயர் கொடுக்கப்பட வேண்டும்?

அப்பெயரைக் கொடுத்த புண்னியவான்கள் இந்தத் தொல்லியல் துறையில் மிகுந்து காணப்படுகிற பிராமணர்கள். தமிழுக்கு முதன்மை வந்துவிடக்கூடாது என்று ஒரு சமஸ்கிருதப் பெயரான பிராம்மி என்ற ஒட்டுப்போட்டுக் கூறிவருகிறார்கள்.

உண்மையில் பல சமஸ்கிருத புராண நூல்களிலேயே – மொழிகளின் பட்டியல் ஒன்று வருகிறது. அதாவது கி.மு3 ஆவது நூற்றாண்டிலேயே எழுந்த ‘சமவயங்ககத்தா’ என்ற பிராகிருதத்தில் எழுதப்பட்ட சமண நூல் 18 வகை எழுத்துக்களைக் குறிப்பிடுகிறது. அவையாவன.


1.பாம்பி
2.யவனானி
3.தோசபுரியா
4.கரோத்தி
5.புக்கரசரியா
6.போகவையா
7.பகாரியா
8.உயமித்ரகரியா
9.அக்கரபுட்டியா
10.தவனானியா
11.கிணிகையா
12.அங்காலிவி
13.கணிதாவிலி
14.காந்தவ்யவிலி
15.ஆடம்சாலிவி
16.மகாசனி
17.தமிழி
18.பொலிம்னி

இங்கே குறிப்பிடப்பட்டுள்ள எழுத்து வடிவப் பட்டியலில் தமிழி இருப்பது காண்க. தமிழ்தானே முதலில் கண்டுபிடிக்கப்பட்ட எழுத்து வடிவம்? அப்படியானால் அதுதானே பட்டியலில் முதலில் இடம் பிடித்திருக்க வேண்டும்? ஏன் அது 17 ஆவதாகக் காட்டப்பட்டிருக்கிறது? காரணம், இப்பட்டியலை வடநாட்டினர் தயாரித்தனர். எனவே அவர்கள் தென்னாட்டுத் தமிழை இறுதியில் வைத்துவிட்டனர்.

சரி, கி.மு 3ஆம் நூற்றாண்டிலேயே  தமிழின் எழுத்து வடிவம் தமிழி என்று கூறப்பட்டிருப்பதைப் பார்த்தோம். தமிழின் எழுத்து வடிவம் தமிழி என்பதுதானே சரியாக  இருக்கமுடியும்! அதென்ன பிராமி? மேற்கண்ட அசோகன் காலமான கி.மு.மூன்றாம் நூற்றாண்டில் கூறப்பட்ட பட்டியலில் எங்காவது பிராமி என்று ஓர் எழுத்து வடிவம் வந்துள்ளதா? இல்லையே! அப்படியானால் தமிழோடு பிராமி என்று ஒட்டு சேர்த்தவன் வேண்டுமென்றே ஓர் உள்நோக்கத்துடன் ஒட்டு சேர்த்திருக்கிறான்! அந்த உள்நோக்கம் தமிழின் தொன்மையைக் குறைக்க வேண்டும் – மாறாக வட்மொழிக்கு முதன்மையை ஏற்ற வேண்டும் என்பதுதான். இது தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது.

ஒருவேளை, பிராமி என்பது சமஸ்கிருத எழுத்தா? சமஸ்கிருதம் எப்போதுமே எழுதப்பட்டதே இல்லையே! அதற்குத்தான் எழுத்து வடிவமே கிடையாதே! எல்லாம் வாய்மொழியோடு சரி! அதனால்தானே வடவேதத்திற்குக் கூட எழுதாக்கிளவி என்று கூறினார்கள்.

கீழடி அகலாய்வு

Comments

Leave a Comment